ஆர்.ஆர்.ஐ மாற்று நில திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பூலோ, ஜூன் 25-

சிலாங்கூர், சுங்கை பூலோ, ரப்பர் ஆராய்ச்சி நிலையம், RRI தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு கிடைக்கப்பெற்றுள்ள 6 ஏக்கர் மாற்று நில திறப்பு விழா, இன்று மாலை 4 மணியவில் சிறப்பாக நடைபெற்றது.

இத்திறப்பு விழா மூலம் பல ஆண்டு காலமாக நிலவி வந்த RRI தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாற்று நில சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

RRI தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு வத்துமலை தலைமையிலான பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவிற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாநாயுடு சிறப்பு வருகை புரிந்தார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள மாற்று நிலத்திலேயே RRI தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று பாப்பாநாயுடு மறு உறுதிப்படுத்தினார். இந்த 6 ஏக்கர் மாற்று நிலத்தின் நடப்பு சந்தை மதிப்பு 9 கோடி வெள்ளியாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த புதிய நிலம், தற்போது பள்ளி வீற்றிருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் MRT நிலையம், பொது போக்குவரத்து உட்பட பலதரப்பட்ட அடிப்படை வசதிகளை கொண்ட வியூகம் நிறைந்த இடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

RRI தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு வத்துமலை கூறுகையில், பள்ளியின் கட்டுமானப் பணி தொடங்கப்படுவதற்கு முன்னதாக அதன் செயல்திட்டம் மற்றும் நிதி வளம் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகலாம் என்றார்.

இந்த திறப்பு விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுடன் பள்ளி தலைமையாசிரியர் புஷ்பராணி கிருஷ்ணன், மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன், செயலாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்