புவனேஸ்வர், ஜன.8-
மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று மலேசிய இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் திங் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாகவே கட்டிக்காக்கப்பட்டு, தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன.
கலாச்சார ரீதியாகவும் மதத்தின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் இரு நாடுகளும் நிறைய விவகாரங்களை பகிர்ந்து கொண்டு, பரஸ்பர உறவை வலுப்படுத்திக்கொண்டு முன்னேறி வருகின்றன என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.
இன்று ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்களுக்கு இந்தியா, ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறும் 18 ஆவது பிரவாசி மாநாட்டிற்கு வருகை புரிந்த கோபிந்த் சிங், ANI செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் மேற்கண்ட நம்பிக்கையை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் இந்த பிரவாசி மாநாட்டில், மலேசிய சார்பில் கோபிந்த் சிங் கலந்து கொண்டுள்ளார்.
முன்னாதாக, மாநாட்டு மையத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் கோபிந்த் சிங்கிற்கு ஒடிசாவின் பாரம்பரிய மேளத்தாள இசை மற்றும் நடனத்துடன் மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது.
பெண் ஒருவர் கோபிந்த் சிங்கிற்கு அரத்தி எடுத்து வரவேற்றதுடன், அவருக்கு சால்வை அணிவித்து, பூக்கொத்து வழங்கி வரவேற்பு நல்கப்பபட்டது. இம்மாநாட்டின் தொடக்க விழாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து, கோபிநத் சிங் கலந்துரையாடினார்.