“நாங்கள் பணி செய்ய மட்டுமே போதிய நேரம் கிடைக்கிறது, இதில் காலிஸ்தானைப் பற்றி நாங்கள் எப்போது பேசுவோம்?, நான் மட்டும் அல்ல என்னை சுற்றியுள்ள அனைவரும் செக்கு மாடுகள் போல ஒரே வட்டத்தில் சிக்கியுள்ளோம்”, என்று கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் பிராம்டன் நகரில் வசிக்கும் 30 வயது டாக்ஸி டிரைவர் குர்ஜித் சிங் கூறினார்.
இந்தியா – கனடா இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவும் சூழலில் கனடாவில் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ள காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ள பிராம்டனில் நான் பேசியவர்களில் குர்ஜித் சிங்கும் ஒருவர்.
காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தில் பொது மக்களின் பங்கேற்பு குறித்து பேசிய குர்ஜித் சிங், “நாங்கள் ‘வார இறுதி சமூகம்’ என்ற சமூகத்தில் வாழ்கிறோம். எங்கள் பிறந்தநாள் மற்றும் பிற நிகழ்ச்சிகளும் வார இறுதி நாட்களில் மட்டுமே கொண்டாடப்படுகின்றன” என்றார் அவர்.
கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு உள்ளது?
கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரும், சீக்கிய தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சர்ரே நகரில் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய ஏஜென்டுகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.