கெடா,அக்டோபர் 29-
கெடா மாநில அரசின் 2024 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு மொத்தம் 3 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு 75 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கெடா மாநில சீன, இந்தியர், சயாமிய மற்றும் அரசு சார்ப்பற்ற இயக்கங்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் Wong Chia Zhen தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பள்ளி மேலாளர் வாரியக் குழுவின் விண்ணப்பங்களுக்கு ஏற்றவாறு இந்த 75 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவற்றில் மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா 10 ஆயிரம் வெள்ளியும், இதர 9 தமிழ்ப்பள்ளிளுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக Wong Chia Zhen கூறினார்.
மேலும் , கடந்த சில ஆண்டுக் காலமாக தமிழ்ப்பள்ளிகளுக்கு என்று கெடா மாநில அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான மானியமும் கிடைக்கவில்லை . இப்பொழுது , கெடா மாநில சீனர் மற்றும் இந்தியர் ஆட்சிக் குழுவின் முயற்சியில் மாநில பட்ஜெட்டில் 3 லட்சம் வெள்ளி மானியம் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பபட்டுள்ளதாக Wong Chia Zhen தெரிவித்தார்.
விண்ணப்பம் பெறப்படும் பட்சத்தில் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு மானிய ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் மேலும் விவரித்தார்.
அலோஸ்டார் விஸ்மா டாருல் அமானில் கெடா மாநில அளவில் இன்று நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் Wong Chia Zhen இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சானுசி முஹமட் நோர் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்..
இதனிடையே மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சானுசி தமது உரையில் கெடா மாநிலத்தில் மூவின மக்களின் நலன் சார்ந்த விவகாரங்கள் எப்போதுமே காக்கப்படும் என்று உறுதி கூறினார்.
இந்தியர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகள் உரிய கவனம் செலுத்தப்பட்டு தீர்க்கப்படும்.
கெடா மாநிலத்தைப்பொறுத்தவரையில் மாநில அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளனர். ஆகையால் இந்தியர்களின் பிரச்சினைகள் அவர்களிடம் தெரிவிக்கும்படி மாநில இந்தியர்களை மந்திரி பெசார் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்களுக்கு மானிய ஒதுக்கீட்டின் காசோலையையும், அரசு சார்ப்பற்ற இயக்கங்களுக்கு தீபாவளி அன்பளிப்பையும் டத்தோஸ்ரீ சானுசி எடுத்து வழங்கினார்.