சுங்கை பூலோ, ஜூன் 12-
வரலாற்று சிறப்பு மிக்க சுங்கை பூலோ ரப்பர் ஆய்வு நிலையமான R.R.I. தமிழ்ப்பள்ளிக்கு, கடந்த ஒன்பது ஆண்டு காலமாக நிலவி வந்த மாற்று நில விவகார சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டும் வகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 6 ஏக்கர் மாற்று நிலத்திலேயே பள்ளியின் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, சிலாங்கூர் மாநில அரசாங்க செயலக கட்டடத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற நான்கு தரப்பினர் கலந்து கொண்ட சந்திப்புக் கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி வீற்றிருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்தித்திற்கு உட்பட்ட வியூகம் நிறைந்த பகுதியான சுங்கை பூலோ, குவாசா சிட்டி சென்டர், பெர்சியாரன் குவாசா உத்தாமா, ஜாலான் தாசிக் பேடு, Lot: 94424 என்ற இடத்தில் 6 ஏக்கர் மாற்று நிலத்தில் பள்ளியை நிர்மாணிப்பதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தமது முழு ஆதரவை வழங்கியதுடன், அதனை மறு உறுதி செய்துள்ளார்.
இந்த நான்கு தரப்பு சந்திப்பில் R.R.I. தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு வத்துமலை, துணைத் தலைவர் மாதவன் பத்துமலை, பள்ளியின் முன்னாள் மேலாளர் வாரியத் தலைவர் முனுசாமி வாசுதேவன், முன்னாள் துணைத் தலைவர் சுரேஷ் குமார் பத்மநாபன், Kota Damansara சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது இசுவான் அஹ்மத் காசிம், அவரின் உதவியாளர் நவீன் ராசையா மற்றும் கோத்தா டாமன்சாரா இந்திய சமூக கிராமத் தலைவர் திருமணி தேவி முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
MRT ரயில் நிலையம், MRT பேருந்து உட்பட பொது போக்குவரத்து வசதிகள், 28 ஏக்கர் நிலப்பரப்பில் குவாசா சென்ட்ரல் பார்க், தேசிய தொடக்கப்பள்ளி, ஆடம்பர வீடமைப்புத்திட்டங்கள் என வியூகம் நிறைந்த பகுதியில் வழங்கப்பட்ட 6 ஏக்கர் மாற்று நிலத்தில் பள்ளியின் புதிய கட்டடம் கட்டப்படுவதை மறு உறுதி செய்துள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடுவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு வத்துமலை, பெற்றோர்கள் சார்பில் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் RRI தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஏக்கர் மாற்று நிலத்தை தற்காப்பதில் உறுதுணையாக இருந்து வரும் மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன், செயலாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் மற்றும் புஷ்பராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.