பகாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விடிவு பிறந்தது

நெகிரி செம்பிலான் , அக்டோபர் 19-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக இழுபறி நிலையில் இருந்து வந்த பஹாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வீரப்பன், / பஹாவ் சட்டமன்ற உறுப்பினர் தியோ கோக் சியோங்- கின் ஒத்துழைப்புடன் இவ்விவகாரத்தை மாநில ஆட்சிக்குழுக்கூட்டத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பந்தர் ஐ.ஓ.ஐ பஹாவ் ( ஐ.ஓ.ஐ. ) நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பகாவ் நகரில் ஏற்கனவே தமிழ்ப்பள்ளிக்கு என்று பொதுவாக ஒதுக்கப்பட்ட அந்த 5 ஏக்கர் நிலம், பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு உறுதி செய்யப்பட்டு, அப்பள்ளியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவின் செயலாளர் முகமது அமின் பின் லுடின், அதற்கான கடிதத்தை கடந்த வாரம் வழங்கியுள்ளார் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் தெரிவித்தார்.

இந்த பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம் 2018 ஆம் ஆண்டிலிருந்து விஸ்வரூபம் எடுத்த நிலையில் அந்த தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு சொந்த நிலத்தை பெறும் முயற்சியில் பள்ளி மேலாளர் வாரியம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் தொடர்ந்து போராடி வந்ததையும் வீரப்பன் நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்ந்தார்.

எனினும் இவ்விவகாரம் இவ்வாண்டு முற்பகுதியில் தமது கவனத்திற்கு கொண்டு வந்ததன் விளைவாக கடந்த மே மாதம் முதல் தேதி தாமும், முன்னாள் காப்பார் எம்.பி.யும், பிரதமரின் அரசியல் செயலாளர்களில் ஒருவருமான ஜி. மணிவண்ணனும், பகாவ் நகரில் தமிழ்ப்பள்ளிக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த நிலப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டதாக வீரப்பன் விவரித்தார்.

அந்த ஐந்து ஏக்கர் நிலம், பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கொன்று அரசாங்க பதிவேட்டில் இடம் பெற்று விட்டதால், தற்போது 160 மாணவர்கள் பயிலும் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு கிடைக்கப்பெற்ற 5 ஏக்கர் நிலத்தில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

Caption

எஸ். வீரப்பன்.
ஆட்சிக்குழு உறுப்பினர், நெகிரி செம்பிலான் மாநில அரசு

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்