சிலாங்கூர்,செப்டம்பர் 26-
பக்திமணம் கமழும் உலக சைவ நன்னெறி மாநாடு, நாளை மறுநாள் செப்டம்பர் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பத்துமலை திருத்தலத்தில், மிகச்சிறப்பான முறையில் நடைபெறவிருக்கிறது.
தருமபுர ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு இம்மாநாடு நடைபெறவிருப்பதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு, மயிலாடுத்துறையில் சைவ மடங்களுள் ஒன்றான தருமபுர ஆதீனம், அல்லது தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது.
உலக சைவப் பேரவையினால் உலக சைவ நன்னெறி மாநாடு, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இந்த முறை உலக சைவ நன்னெறி மாநாட்டை அவர்கள் பத்துமலைத்திருத்தலத்தில் நடத்தவிருகின்றனர்.
தமிழ்வழி வழிபாடு, திருமுறை வாழிபாடு, பண்ணிசை உள்ளிட்ட சைவ சமய நன்னெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாநாடு, உலக சைவப் பேரவையினால் நடத்தப்பட்டு வருவதாக இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், தருமை ஆதீனப் புலவர் மரபின் மைந்தன் முத்தையா, முனைவர் இரா. செல்வநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சமய உரையை நிகழ்த்தவிருக்கின்றனர் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்
இந்த மாநாட்டில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை இந்துக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும். முற்றிலும் இலவசமான இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, சமய சிந்தனையையும், அறிவையும் பெருக்கிக்கொள்வதற்கு இது அற்புதமான வாய்ப்பாகும் என்று டான்ஸ்ரீ நடராஜா அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா,
தலைவர், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம்.
செய்தி & படம் : சுஜித்திரா கலைச்செல்வன்