பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்டுள்ள பசுமை வாரத் திட்டம் “பகிரும் சமூகம்” என்பதனைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.
இப்புவியில் வாழ்வதற்குத் தேவையான நிலைபேறு, கூட்டுமுயற்சி, நடுவுநிலைமை மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகம் மற்றும் விவசாயிகளின் விதை சேமிப்பு மற்றும் பகிர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக இவ்வருடம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் விதை பகிர்தலில் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளது.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இந்தப் பசுமை வாரத் திட்டத்தில் இளையோர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேளாண் தொழில்துறை மற்றும் மலேசியாவில் விதை வர்த்தகமயமாக்கலில் காட்டப்படும் வேகம் நம்முடைய விதை பல்வகைமை, வேளான் பல்லுயிர்த்தன்மை மற்றும் விவசாயிகளின் விதை முறைமைகளைப் பாழ்படுத்திவிட்டது. விதை ஒரு வர்த்தகப் பொருளாகப் பார்க்கப்படுவதால் நம்முடைய பலதரப்பட்ட பாரம்பரிய உள்நாட்டு விதைகளை இழந்து வருகிறோம். இதன் விளைவாக நம்முடைய பாரம்பரிய உணவு மற்றும் உணவு சார்ந்த தகவல் மற்றும் கலாசாரமும் சிதைவுக்கு உள்ளாகிறது.
மலேசியாவில் சுமார் 90% காய்கறி விவசாயிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற விதைகளையே நடவுக்காகப் பயன்படுத்துகின்றனர். ‘ஃபோர்டியூன் பிஸினஸ் இன்சைட்ஸ்’ என்ற சஞ்சிகை உலகளாவிய விதை வர்த்தகத்தின் மதிப்பு 2017இல் அமெரிக்க டாலர் 40.70 பில்லியனாக இருந்து 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டாலர் 61.32 பில்லியனை எட்டவிருப்பதாகக் கணித்துள்ளது. உலகளாவிய விதை சந்தையை 10 பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த நிறுவனங்களில் சில வேளான் இரசாயன வர்த்தகத்தில் கோலோச்சும் நிறுவனங்களாகும். இதனால்தான் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் விதை வாங்கும்பொழுது வேளான் இரசாயனங்களையும் சேர்த்து வாங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
“நாம் விதைகளை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே திரும்ப கொண்டு வர வேண்டும். விவசாயிகளின் விதை பாதுகாப்பு முறை மற்றும் சமூக அளவில் விதை சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதே பினாங்கு பயனீட்டாளர் சங்க முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும். இன்று நடத்தப்படும் விதை பகிர்வு சந்தை மூலம் உள்ளூர் மற்றும் பாரம்பரிய தாவர வகைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறோம்.
விவசாயிகளுக்கும் மற்றும் சிறு அளவில் தோட்டம் வைத்திருபவர்களுக்கும் விதை சேமிப்பு மற்றும் பகிர்தலை ஊக்குவிக்கவிருக்கிறோம். இந்த நடவடிக்கைகளின் மூலம் சமூக விதை சேமிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தையும் சேர்த்து இன்னும் சில சமூக விதை சேமிப்பு இயக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த விதை பாதுகாவலர்கள் சமூக விதை பாதுகாப்பு முன்னெடுப்பில் (Inisiatif Rizab Benih Komuniti) பதிவு செய்யப்பட்டுள்ளனர்”, என்கிறார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதீர்.
குறிப்பு: பசுமை நடவடிக்கை வாரம் என்பது சமூகம், நாடு, பிரதேசம் மற்றும் சர்வதேச அளவில் நிலைபேறான பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கான கூட்டுப் பிரச்சார நடவடிக்கையாகும். சுவீடன் நாட்டின் இயற்கைப் பராமரிப்பு அமைப்பு (SSNC) 1990இல் சுவீடன் நாட்டு மக்களின் பசுமை நடவடிக்கை வாரப் பிரச்சாரத்தையும், 2010இல் அனைத்துலகப் பிரச்சாரத்தையும் தொடங்கியது.
உலகத்தைச் சிறந்த உலகமாக உருவாக்குவதற்காக உலகெங்கிலும் உள்ள அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்த அமைப்பு உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தப் பிரச்சாரத்தைப் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்துலகப் பயனீட்டாளர் அமைப்புடன் இணைந்து சுவீடன் நாட்டின் இயற்கைப் பராமரிப்பு அமைப்பு மேற்கொள்கிறது.