பினாங்கு, டிச.5-
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ எம். ராமச்சந்திரன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையில் பினாங்கு, ஜார்ஜ் டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் நட்ராதுன் நாயிம் சைடி முன்னிலையில் நிறுத்தப்பட்ட டத்தோ ராமச்சந்திரனை விசாரணைக்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.
டத்தோ ராமச்சந்திரனை தடுப்புக்காவலில் வைப்பதற்கு 7 நாள் அனுமதி கேட்டு, எஸ்.பி.ஆர்.எம். விண்ணப்பித்த போதிலும், நீதிமன்றம் 6 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது-
பினாங்கு பிறையில் உள்ள ராமச்சந்திரனின் வீட்டிற்கு நேற்று காலை 8 மணியளவில் சென்ற SPRM அதிகாரிகள், அவரை வாகனத்தில் ஏற்றி, பினாங்கு, ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநராக ராமச்சதிரன் பணியாற்றிய காலத்தில் தமது பதவியை தவறாக பயன்படுத்தி,, சொந்த லாபத்தை ஈட்டுவதற்கான செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் R. Roshunraj தெரிவித்தார்.
எனினும் ராமச்சந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மை குறித்து துல்லியமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும் பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில் அந்த வாரியத்தின் நிர்வாக இயக்குநராக ராமச்சந்திரனை நியமித்துள்ளார்.
சுமார் 130 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தின் பினாங்கு தைப்பூச விழாவில் அவர்களின் வெள்ளி இரதத்திற்குப் போட்டியாக 2017 ஆம் ஆண்டு தைப்பூச விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தினால் முதல் முறையாக வெள்ளேட்டம் விடப்பட்ட தங்க ரதம் கொள்முதலில் நடந்திருப்பதாக கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தங்க ரதம் தொடர்பில் பினாாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி, எஸ்.பி.ஆர்.எம். விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட வேளையில் இந்து அறப்பணி வாரியம் தொடர்பான அனைத்து நிர்வாகப் பணிகளையும் தனது உள்ளங்கையில் வைத்திருந்தாக கூறப்படும் ராமச்சந்திரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க ரதத்திற்கு பூசப்பட்டுள்ள தங்கம், சொக்கத் தங்கம் அல்ல என்றும், பெரியளவில் பணம் செலவிடப்பட்டு, தங்க ரதம் வடிவமைக்கப்பட்ட போதிலும் அதன் மதிப்புக்கு ஏற்ப வேலைபாடுகளும், செலவிடப்பட்ட தொகையும் இல்லை என்று அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக அண்மையில் எஸ்.பி.ஆர்.எம்.மிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.