பினாங்கு, டிச.5-
பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சரும், உரிமைக் கட்சியின் தலைவருமான் டாக்டர் P. இராமசாமி, தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதை அந்த ஆணையத்தின் வட்டாரம் உறுதி செய்துள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் இராமசாமியிடம் இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை என்ற போதிலும் பினாங்கு தைப்பூச தங்க ரதம் கொள்முதலில் ஊழல் நடந்து இருப்பதாக கூறி, பல்வேறு புகார்களை SPRM பெற்றுள்ளதாக அந்த ஆணையத்தை மேற்கொள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாக்டர் இராமசாமிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையிலேயே அவரை விசாரணை செய்வதற்கு ஏதுவாக அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கும் வகையில் அவரின் அனைத்துலக கடப்பிதழை SPRM முடக்கி இருப்பதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்தோனேசியா, Banda Acheh -வில் உள்ள Wali Nanggoroe Acheh- வில் அமைதிக்கான உயரிய விருதை பெறுவதற்கு நேற்று அச்சேவிற்கு புறப்படுவதற்காக பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு டாக்டர் இராமசாமி வந்துள்ளார்.
எனினும் டாக்டர் இராமசாமி வெளிநாட்டிற்கு செல்வதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கும் கட்டுப்பாட்டை புத்ராஜெயா, SPRM தலைமை அலுவலகம் விதித்து இருப்பதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது-
அதேவேளையில் கடந்த வாரம் பினாங்கு இந்த அறப்பணி வாரிய அலுவலகத்தில் SPRM அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.. சில கோப்புகளை கைப்பற்றயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக டாக்டர் இராமசாமி இருந்த போது, பினாங்கு தைப்பூச விழாவிற்கு அறப்பணி வாரியத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட தங்க ரதம் கொள்முதலில் அதிகமான தொகை வெளியாக்கப்பட்டு, ஊழல் நடந்து இருப்பதாக கூறி, டாக்டர் இராமசாமிக்கு எதிராக SPRM- மில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்க ரதத்திற்கு முலாம் பூசப்பட்டுள்ள தங்கம், சுத்தமான தங்கம் அல்ல என்பதும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்க தேர் கொள்முதலில் ஊழல் நடந்து இருப்பதாக கூறி அதற்கான அதாரங்களும் SPRM- மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம். இராமச்சந்திரனிடமும் SPRM அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.