புத்ராஜெயா, ஜூன் 25-
தனது காதலி, மற்றொருவரை திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்தததை கண்டு ஆத்திரமுற்று, அந்தப் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக மரணம் தண்டனை விதிக்கப்பட்ட பாதுகாவலர் ஒருவர் இன்று அத்தண்டனையிலிருந்து தப்பினார்.
எனினும் அவருக்கு எதிரான குற்றத்தை நிலைநிறுத்திய கூட்டரசு நீதிமன்றம், மரணத் தண்டனைக்கு பதிலாக 35 ஆண்டு சிறை மற்றும் 15 பிரம்படித் தண்டனை விதித்தது.
42 வயதுடைய M. குணசேகரன் என்ற அந்த பாதுகாவலர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி, பிற்பகல் 1.50 மணியளவில்கோட்டா டாமான்சாரா, ஜெயண்ட் பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் காருக்குள் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தாம் பாதுகாவலராக வேலை செய்த இடத்தில் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றிய 35 வயது D. தாரணி என்பவரை கழுத்திலேயே பல முறை கத்தியால் குத்தி, கொலை செய்தப் பின்னர் சடலத்துடன் காரில் சென்று டாமான்சாரா போலீஸ் நிலையத்தில் குணசேகரன் சரண் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.