ஜன.10-
MIDC எனப்படும் மலேசியா-இந்தியா இலக்கவியல் மன்றம் எனும் புதிய அமமைப்பு , இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. மலேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் இந்திய மின்னணு , தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் சந்திப்பின் விளைவாக இந்த முயற்சி உருவானது.
இந்த மன்றம், இலக்கவியல் வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம், நிபுணத்துவப் பகிர்வு, கொள்கை சீரமைப்பு, தொழில் சங்கங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு , இலக்கவியல் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு இலக்குகளைக் கொண்டுள்ளது. மேலும், இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் 5G தொழில்நுட்ப மேம்பாடு போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தப்படும்.
இந்த மன்றம், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஆகஸ்ட் 2024இல் இந்திய பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. MIDC இன் தொடக்க கூட்டம் இந்த ஆண்டின் முதல் பாதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் கோபிந்த் சிங் தனது இந்திய பயணத்தின் போது இந்திய அமைச்சர்கள் டிஜிட்டல் இந்தியா பவுண்டேஷன் , Open Network for Digital Commerce பிரதிநிதிகளை சந்தித்தார்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மலேசியாவில் 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க உறுதி அளித்துள்ளன. இதுவரை, 214 இந்திய வம்சாவளி நிறுவனங்களுக்கு மலேசியா இலக்கவியல் தகுதி வழங்கப்பட்டுள்ளது, அவை மலேசிய ஊழியர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளன. இந்த மன்றம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தி, டிஜிட்டல் துறையில் எதிர்கால ஒத்துழைப்புக்கு அடித்தளமிடுகிறது.