தெமர்லோ, ஆகஸ்ட் 06-
தெமர்லோ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
நாட்டின் முன்னணி ஆலயங்களில் ஒன்றான மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் தலைவர் தேர்தலில் 250 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்ற P. ராமன் பழனியப்பனின் வெற்றி செல்லத்தக்கது என்று தெமர்லோ உயர் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதேவேளையில் தலைவர் தேர்தலில் வெறும் 206 வாக்குகள் பெற்று தோல்விக் கண்ட அதன் நடப்புத் தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் கந்தசாமியின் தோல்வியை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் நிர்வாகம், இனி பி. ராமன் தலைமையில் செயல்படும் அதேவேளையில் தலைவர் பதவிக்கு அப்பாற்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஆலயத்தின் துணைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், துணைப் பொருளாளர் மற்றும் 19 நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல், ஆலயத்தின் புதிய தலைவர் பி. ராமனின் தலைமையில் ஒரு சிறப்புக்கூட்டத்தின் வாயிலாக நடத்தப்படுவதை உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ்லன் மேட் நார் தமது தீர்ப்பில் மறு உறுதிப்படுத்தியுள்ளாதாக ராமனின் வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.
ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத் தலைவர் தேர்தலை வழிநடத்திய இவ்வழக்கில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 5 தேர்தல் அதிகாரிகளில் இருவரான டத்தோ எம்.பி. நாதன் மற்றும் டத்தோ எம். தேவேந்திரன் ஆகியோர், ராமனின் வெற்றியை உறுதி செய்து, உயர் நீதிமன்றத்தில் அப்பிடெவிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அப்பிடெவிட் மனுவின் உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு ஆலயத்தின் சட்டப்பூர்வத் தலைவர் ராமனே என்று நீதிபதி ரோஸ்லன் மேட் நார் தமது தீர்ப்பில் மறு உறுதிப்படுத்தியுள்ளதாக தெமர்லோ உயர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் வழக்கறிஞர் செல்வம் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜுன் 23 ஆம் தேதி பெற்ற ஆலயத் தலைவர் தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்தக்கோரி, டத்தோ தமிழ்ச்செல்வன் மற்றும் இதர ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக பி. ராமன் ஒரு தரப்பாக சார்வு செய்த வழக்கு மனுவில் கடந்த ஜுலை 19 ஆம் தேதி, அவர் பெற்றிருந்த இடைகாலத் தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதையும் நீதிபதி தமது தீர்ப்பில் மறு உறுதிப்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் செல்வம் குறிப்பிட்டார்.
அதேவேளையில் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் நடப்புத் தலைவர் என்று கூறிக்கொண்டு, நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆலயத்தின் உறுப்பினர்கள் விவரக்குறிப்பு புத்தகங்கள், ரசீதுகள் மற்றும் இதர ஆவணங்களை டத்தோ தமிழ்ச்செல்வன் கந்தசாமி, தான் தோன்றித்தனமாக எடுத்து சென்று இருப்பதையும் வழக்கறிஞர் செல்வம், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
டத்தோ தமிழ்ச் செல்வனால் அல்லது அவரின் ஏஜெண்டினால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் உடனடியாக ஆலயத் தலைவர் ராமனிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக டத்தோ தமிழ்ச்செல்வனை சிறையில் தள்ளுவதற்கு வகை செய்யும் ஓர் விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ராமனுக்கு நீதிபதி ரோஸ்லன் மேட் நார் பரிந்துரை செய்தார்.
இதனிடையே பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தமது வெற்றியை உறுதி செய்வதற்கு பாடுபட்ட வழக்கறிஞர் செல்வம் மற்றும் அவர் தலைமையிலான வழக்கறிஞர் குழுவிற்கு ராமன் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தேர்தல் அதிகாரிகள் என்ற முறையில் தங்களின் அப்பிடெவிட் மனுவின் மூலம் ராமனின் வெற்றியை உறுதி செய்து இருக்கும் வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதிகளான டத்தோ எம். நாதன் மற்றும் டத்தோ தேவேந்திரன் ஆகியோர் வழக்கிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தார்.
ராமன் பழனியப்பன்,
அதிகாரப்பூர்வத் தலைவர்,
மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம்