ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்திற்கு வழிவிடுவதற்கு கின்ரரா தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலத்தின் ஒரு பகுதியை கைவைப்பதா? பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு

கோலாலம்பூர், ஜூன் 27-

சிலாங்கூர் மாநிலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தில் ஒரு பகுதியை கைவைப்பதற்கு மேம்பாட்டாளர் நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பள்ளி பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி அருகில் கொண்டோமினியம் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்பு கட்டுமானத் தளத்திற்கு வழிவிடுவதற்கு சாலையை விரிவுப்படுத்தும் திட்டத்தில் பள்ளியின் நிலத்தில் ஒரு பகுதியை கைவைப்பதற்கு மேம்பாட்டாளர் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி நிலத்தின் ஒரு பகுதி கைவைக்கப்பட்டால் பள்ளியின் சிற்றுண்டி சாலை, பாலர் பள்ளி மற்றும் இசைப்பள்ளி வகுப்பறை முதலிய கட்டடப்பகுதி பாதிக்கும் என்று கின்றாரா தமிழ்ப்பள்ளியை பாதுகாக்கும் நடவடிக்கை குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஸ்ரீ ராம் தெரிவித்தார்.

பள்ளி நிலத்தில் கைவைக்கும் மேம்பாட்டாளர் நிறுவனத்தின் முயற்சியை முறியடிக்க இவ்விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்ற ஸ்ரீ ராம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான கின்றாரா தோட்ட தமிழ்ப்பள்ளி, கடந்த 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். அன்றைய காலனித்துவ ஆட்சியில் தோட்ட மக்களின் கல்விக்காக ஆங்கிலேய தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பல்வேறு உருமாற்றங்களை கண்டுள்ளன.

பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளில் மிக பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இப்பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அன்றைய நாளில் கின்றாரா தோட்டம் என்று ஒன்று இருந்துள்ளது. அதில் அதிகமான இந்தியப் பட்டாளிகள் தங்கள் உழைப்பை வழங்கியுள்ளனர் என்பதற்கு இன்று சாட்சியாக விளங்குவது கின்றாரா தோட்டப் பள்ளியும் கோயிலும் ஆகும்.

இவ்விரு கல்வி மற்றும் சமயத் தளங்களும் இந்தியர்களின் மரபுடைமை சின்னங்களாகவும் விளங்குகின்றன.

இத்தோட்ட தமிழ்ப்பள்ளியின் நிலத்தில் ஒரு பகுதியை எடுப்பதற்கு மேம்பாட்டாளர் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு கின்றாரா சட்டமன்ற உறுப்பினரும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஸ்ரீ ராம் கேள்வி எழுப்பினார்.

அப்பகுதியில் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமாக இருந்தாலும் பொது மக்களின் அடிப்படை வசதிகள் நிறைந்த இடப்பகுதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சாலை விரிவாக்கத்திட்டத்திற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீ ராம் கேள்வி எழுப்பினார்.

கொண்டோமினியம் வீடமைப்பு கட்டுமானத் தளத்திற்கு செல்லும் சாலையை விரிவுப்படுத்தும் திட்டத்தில் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் நிலத்தில் 8 ஆயிரத்து 823 சதுர அடி நிலம் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்