உறவுகள் வலுவடைய வேண்டும், சிங்கப்பூர் பிரதமர்

ஜொகூர் பாரு, ஜூன் 28-

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் இரு தரப்பும் நன்மை அடையக்கூடிய அதிகமான திட்டங்களை உறுதி செய்யும் வேளையில் இரு தரப்பு உறவையும் வலுப்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் விரும்புவதாக அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் நிலவழிப் பயணத்துக்கு முக்கிய இணைப்பாகத் திகழும் ஜோகூர் கடற்பாலத்தில் இன்று ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நூற்றாண்டு கொண்டாட்ட விழாவையொட்டி வழங்கிய செய்தியில் சிங்கப்பூர் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மலேசியாவுடன் பரஸ்பர நல்லுறவை சிங்கப்பூர் தொடர்ந்து பேணி வருகிறது. இந்த நல்லுறவு அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்று லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டார்.

இந்த நூற்றாண்டு கொண்டாட்ட விழா ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோடா இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹப்பிஸி காஜி மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

ஜோகூர் மாநிலத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும் கடற்பாலத்தின் கட்டுமானம், கடந்த 1919 ஆம் ஆண்டு தொடங்கியது. பின்னர் 1924 ஆம் ஆண்டு ஜுன் 28 ஆம் தேதியன்று அன்றைய ஜோகூர் மாநிலத்தை ஆட்சி புரிந்த காலஞ்சென்ற சுல்தான் இப்ராஹிம் இப்னி சுல்தான் அபு பாக்கார் தலைமையில் அப்பாலம் திறப்பு விழா கண்டது.

மலேசியாவும், சிங்கப்பூரும் சுதந்திரம் பெறுவற்குமுன்னதாகவே ஜோகூர் கடற்பாலம் கட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்