ஒருவரின் குப்பை, மற்றொருவரின், முரளி கார்த்திக்கின் சர்ச்சை கமென்ட்ரியும் கண்டனமும்

இப்போட்டியில் யாஷ் தயாள் சிறப்பாகப் பந்து வீசி, 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணியில் விளையாடிய யாஷ் தயாள், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் கொடுத்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, அது தொடர்பான மீம்களை நெட்டிசன்கள் தற்போது வைரல் செய்து வருகின்றனர்.

அந்தச் சமயத்தில் சமூகவலைதளங்களில் யாஷ் தயாளைக் கலாய்த்துப் பல மீம்கள் பதிவிடப்பட்டன. இதுகுறித்து அப்போது பேட்டியளித்திருந்த யாஷ் தயாள், பலரும் தன்னிடம் சமூகவலைதள பக்கம் செல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், அதை மீறித் தான் சமூகவலைதளங்களில் தன்னைப் பற்றிய மீம்களைப் பார்த்து மிகுந்த வருத்தத்திற்குள்ளானதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணியில் எடுக்கப்பட்டிருக்கும் யாஷ் தயாள், கடந்த இரண்டு போட்டிகளிலும் நேர்த்தியான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முரளி கார்த்திக், “ஒருவருடைய குப்பை, மற்றொருவரின் புதையலாகலாம்” என்று யாஷ் தயாளைப் பாராட்டுவதாக நினைத்துப் பேசியிருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலாக, நெட்டிசன்கள் பலரும் முரளி கார்த்திக், யாஷ் தயாளைப் பாராட்டும் அதேசமயத்தில் அவரைக் குப்பையுடன் ஒப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளார் என்று அவரைக் கண்டித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பெங்களூரு அணி, தனது சமூகவலைதள பக்கத்தில் யாஷ் தயாளின் புகைப்படத்தைப் பதிவிட்டு, “யாஷ் தயாள் புதையல்தான்” என்று பதிவிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்