ஓர் இந்திய முதியவரை அடித்து காயப்படுத்திய ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்

சிக்னல் விளக்கு போடாமல் வளைந்து விட்ட வாகனமோட்டியை கண்டித்ததற்காக ஓர் இந்திய முதியவர் முகத்தில் படுகாயம் ஏற்படும் அளவிற்கு கண்மூடித்தனமாக அடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் ஆடவர் சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

அடுத்த வாரம் பிப்ரவரி 17 ஆம் தேதி சனிக்கிழமை மணமேடை காணவிருக்கும் 26 வயது Mohammad Zakaria Mohd Razali என்ற அந்த நபர் மாஜிஸ்திரேட் Mihammad Bukhori Ruslan முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்த ஆடவர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி காலை 9.20 மணியளவில் பூச்சோங், தாமான் புத்ரா பிரிமாவில் 73 முதியவரை கண்மூடித்தனமாக அடித்து காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கோலாலம்பூர், பிரக்பீல்ட்ஸிலிருந்து தாமான் புத்ரா பிரிமாவில் உள்ள தமது நண்பரை சந்திப்பதற்கு அந்த முதியவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த முதிவரை கடுமையாக தாக்கி விட்டு அந்த நபர் தப்பிச் சென்ற வேளையில் புருவத்திலும், தலையிலும், முகத்திலும் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த முதியவர், பின்னர் பொது மக்களின் உதவியுடன் செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த முதியவர் காயமுற்ற காட்சியை கொண்ட புகைப்படங்கள் அண்மையில் சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்