காப்புறுதிப் பணத்திற்காக பாலிஸிதாரரை வாகனத்தினால் மோதித் தள்ளி கொல்லும் கும்பல்

காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக பாலிஸிதாரரை வாகனத்தினால் மிக கொடூரமாக மோதித்தள்ளி கொல்லும் காப்புறுதி முகவரை உள்ளடக்கிய கும்பல் ஒன்றை ஜோகூர் மாநில போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமலேயே அவரின் பெயரில் காப்புறுதி பாலிஸி எடுத்து, தங்களுக்கு வேண்டியவர்களின் பெயரை வாரிசுதாரராக நியமித்து, காப்புறுதி பணத்தை கபளிக்காரம் புரியும் இந்த கும்பல், அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.

5 லட்சம் வெள்ளி காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக கடந்த மாதம் Johor, Kulai- யில் ஆடவர் ஒருவர் ஈவுயிறக்கமின்றி லோரியினால் மிக கொடூரமாக மோதப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குமார் இதனை குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமலேயே காப்புறுதி பாலிஸிக்கு விண்ணப்பித்து, அது அங்கீகரிக்கப்பட்டு, பாலிஸிப் பத்திரம் கையில் கிடைத்தப் பின்னர் சில மாதங்களுக்கு காப்புறுதி பிரமியத் தொகையை இந்த கும்பலே செலுத்தி வருகிறது.

குறிப்பிட்ட மாதத்திற்குப் பின்னர் அந்த பாலிஸிதாரர் சாலை விபத்தில் இறந்து விட்டதைத் போல தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவரை வேண்டுமென்றே அக்கும்பல் வாகனத்தினால் மோதித் தள்ளி கொல்லுகிறது.

ஆகக்கடைசியாக கடந்த மே 6 ஆம் தேதி அதிகாலை 4.40 மணியளவில் Kulai- Jalan Senai- Seelong- கில் Honda EX5 இல் பயணித்த 38 வயது ஆடவரை இந்த கும்பல் வாகனத்தினால் மோதி தள்ளி கொன்றுள்ளதாக குமார் தெரிவித்தார்.

அந்த ஆடவர் வானத்தினால் மோதப்பட்ட பின்னர் அவர் கீழே விழுந்துள்ளார். பலத்த காயத்துடன் காணப்பட்ட அந்த ஆடவரை விபத்து நடந்த இடத்திலேயே நான்கு பேர் அடங்கிய கும்பல் சரமாரியாக அடித்து மூச்சடைப்பு செய்ய முயற்சி செய்துள்ளனர்.

குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த அந்த நபர், சாகாததைக் கண்ட அந்தக் கும்பல், ஈவுயிறக்கமின்றி Isuzu ரக லோரியைக் கொண்டு அவரை மீண்டும் மோதித் தள்ளி கொன்றுள்ளது

இது வழக்கமான உயிரிழப்பை கொண்ட விபத்து என்றே போலீசார் முதலில் வகைப்படுத்தினர். ஆனால், சவப்பிரசோதனையில் வாகனம் மோதப்பட்டதற்கு அடுத்து அந்த நபர் தடியினால் தாக்கப்பட்டுள்ளார் என்பதற்கான தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த வழக்கை போலீசார் தீவிர புலன் விசாரணை செய்த போது காப்புறுதி பணத்திற்காக கும்பல் ஒன்று நன்கு திட்டமிட்டு இந்த சதி வேலையில் ஈடுபட்டு வந்தது அம்பலமானதாக குமார் குறிப்பிட்டார்.

இந்த கும்பல் தொடர்பில் காப்புறுதி முகவர் உட்பட 23 க்கும் 49 க்கும் இடைப்பட்ட எட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

இது போன்ற சம்பவம் ஜோகூர் மாநிலத்தில் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த கொலை தற்போது 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக குமார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்