கூட்டணிக்கான அச்சாரமா?

அரசியல் கட்சிகள் தங்களின் இருப்பையும், நகர்வையும் மக்களிடையே அடிக்கடி காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆண்டு பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், உதவிப் பொருள்கள் வழங்குதல், பேரணிகள் என பல வடிவங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவை உள்ளன.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் குறிப்பாக உறுப்பினர்களின் பங்கேற்பு என்பது சற்று குறைந்து வரும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு விதத்தில் ‘டிக் டாக்’, புலனம் போன்ற சமூக ஊடகங்களின் பெருக்கமும் வளர்ச்சியும்கூட இதற்கான தேவையைக் குறைத்திருக்கலாம்.

இத்தகைய சூழலில் பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி அவர்களின் தலைமையில் அமைந்த உரிமை கட்சி தொடக்கவிழா கடந்த 26-11-2023இல் கோலாலம்பூரில் நடைபெற்றது.

அதன் தொடக்கவிழாவில் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டது பலருடைய புருவங்களை உயர்த்தியிருக்கிறது. அதிகாரத்தை அனுபவித்து பலத்தைப் பெருக்கிக் கொண்ட கட்சிகள், மாநாடு என்ற பெயரில் மக்களை ஓரிடத்தில் கூட்டிச் சேர்ப்பது என்பது வேறு.

ஆனால், அதிகார முகட்டை நோக்கி பயணிக்கும் அரசியல் கட்சிகள் மத்தியில் DAP-இல்லிருந்து விலகிய பின்னர், கடந்த மூன்று மாதக் காலத்தில் எந்தவொரு பெரிய விளம்பரமும் இல்லாமல் டாக்டர் இராமசாமி கூட்டிய கூட்டத்தில் மக்கள் ஓரளவு திரண்டுள்ளார்கள் என்றால் அந்த முன்னாள் துணை முதலமைச்சர் இன்னும் பல படிகட்டுகளைத் தாண்டுவதற்கு இந்த நிகழ்ச்சி, ஆதரவு திரட்ட அமைந்த முதல் படிகட்டாகவே கருத வேண்டியிருந்தது.

டாக்டர் இராமசாமிக்கு ஆதரவாக இருக்கும் ஊடகங்கள் உட்பட பல முன்னணி பத்திரிக்கைகள், உரிமை கட்சியின் தொடக்கவிழா குறித்து அன்றைய தினமே சுடச்சுட செய்தி வெளியிட்டு இருந்தன. புலனத்திலும் கட்சி தொடக்கவிழா குறித்த காணொலிகள் அதிகம் பகிரப்பட்டன.

ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டர்கள் கலந்து கொண்ட உரிமை கட்சி தொடக்கவிழா, ஏற்பாடு செய்திருந்த விதமும், அது நடத்தேறிய முறையும் இதற்கு முன்பு பார்த்திராத வகையில் சற்று வித்தியாசமாகவே இருந்தது. மலேசிய இந்திய சமூகத்தின் மத்தியில் மற்றோர் அரசியல் கட்சி உதயமாகுவதைத் தடுக்க களேபரங்கள் ஏதும் நிகழுமா என்பதுகூட சந்தேகப்பட வேண்டியிருந்தது.

முதலில் இந்த நிகழ்ச்சி நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், பிரிக்பீல்ட்ஸ், நுண்கலை கோயிலின் கனகசபை மண்டபமாகும். இறுதி நேத்தில் இடம் அளிக்க மறுக்கப்பட்டதால், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனின் உதவியின் மூலம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்துடன் கலந்தாலோசித்து, அதற்குச் சொந்தமான மண்டபம் பெறப்பட்டது என்றுகூட கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் இரகசியமாகப் பேசிக் கொண்டனர்.

ஆனால், மண்டபத்தில் திரண்டவர்கள் வழக்கமான ஒரு கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுபோல களேபரங்கள் ஏதுமின்றி அரசியல் ஆர்வம் பொங்கும் முகங்களுடன் கட்சித் தொண்டர்களைப்போல கட்டுப்பாட்டுடன் அமர்ந்திருந்தனர். இது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலாலம்பூரில் ஒரு மாறுப்பட்ட நிகழ்ச்சியினை கண் முன் நிறுத்தியது.

ஏற்கனவே கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் முத்தியாரா கம்ப்ளெக்ஸ் மண்டபத்தில் அரசியல் கட்சியைத் தொடங்குவதா? இல்லையா? என்று முடிவு எடுக்க டாக்டர் இராமசாமி நடத்திய கூட்டத்தைக் காட்டிலும் உரிமை கட்சி அறிமுக நிகழ்ச்சியில் இரண்டு மடங்கு மக்கள் சங்கமித்து இருந்தனர்.

மஇகா மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சாராத நடுநிலை மக்கள், உரிமை கட்சியை நோக்கித் திரும்பியிருப்பதை ஒரு எழுச்சியாகவே பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரைகள் அனைத்தும், டாக்டர் இராமசாமியின் மூலமாகவே இந்திய சமுதாயத்திற்கு விடியல் காத்திருப்பதைப்போல அமைந்தது.

தமது தலைமையில் அமையவிருக்கும் உரிமை கட்சி, மஇகாவிற்கு எதிரியன்று என்று இராமசாமி அறிவித்த போதே, பலர் இருக்கையை விட்டு எழலாம் என்பதுபோல முணுமுணுப்பதை உணர முடிந்தது. பல்லின கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகள், இந்திய சமுதாயத்தின் நலனை முன்னெடுக்கவில்லை. அக்கட்சிகளின் செயல்கள் பாசாங்குதனமாகும். ஏ.பி.யில் ஜனநாயகம் இல்லை. இந்தியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றார் இராமசாமி.

2008ஆம் ஆண்டிலிருந்து சுமார் 15 ஆண்டுக்காலம் அல்லது மூன்று தவணைகள் DAP-இல் சட்டமன்ற உறுப்பினராக, ஆட்சிக்குழு உறுப்பினராக, மாநிலத் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் இராமசாமி.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்காவது முறையாகப் போட்டியிடுவதற்கு டிஏபி தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இறுதி நேரம் வரை இராமசாமி மனப்பால் குடித்து கொண்டிருந்தார்.

ஆனால், தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற ஒரு வாரம் இருக்கும் பட்சத்தில், இறுதி நேரத்தில் வேட்பாளர் பட்டியலிலிருந்து கழற்றிவிடப்பட்டு கையறு நிலைக்கு இராமசாமி தள்ளப்பட்டார். தமக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் ஒரு நயவஞ்சக நிகழ்வாகத் தம் உரையில் நினைவுக்கூர்ந்தார் இராமசாமி.

இந்திய சமுதாயத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது என்பதே இதன் வெளிப்பாடு என்பதைப்போல உரைத்தார் இராமசாமி. இந்தியர்களின் உரிமைகளைக் காவுக் கொண்ட DAP, அதனைக் காவுக் கொடுத்த பல்லின கட்சிகள். இவ்விரண்டு கட்சிகளின் நயவஞ்ச செயலை இந்திய சமுதாயத்தின் மத்தியில் தோலுரித்து காட்டுவதே உரிமை கட்சியின் லட்சியம் என்பதைப்போல இராமசாமி பேசினார்.

கட்சி தொடங்குவதற்கு முதல் நாளன்று பத்திரிகைளுக்கு நேர்காணல் அளித்திருந்த டாக்டர் இராமசாமி, உரிமை கட்சி தேர்தலில் போட்டியிடுமா? இல்லையா? என்பது இப்போது செய்ய வேண்டிய முடிவன்று. எந்தவொரு கட்சியிடமோ அல்லது கூட்டணியுடமோ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளியுங்கள் என்று கையேந்தி நிற்கமாட்டோம் என்று கூறியிருந்தார்.

அதேவேளையில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற சூழ்நிலை வருமானால் இந்திய சமுதாயத்திற்கு என்ன கிடைக்கும் என்ற கோரிக்கையைச் சம்பந்தப்பட்ட கூட்டணியிடம் முன்வைப்போம் என்பதையும் இராமசாமி தெளிவுபடுத்தியிருந்தார்.

அப்படியென்றால், இதற்கு முன்பு டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதீனை இராமசாமி சந்தித்து பேசியது, கூட்டணிக்கான அச்சாரமாகவே சந்தேகிக்கப்படுகிறது.

காரணம், அரசியல் என்று வரும்போது தேர்தலைக் குறி வைத்து நகர்த்தப்படும் காயாகும் என்பதை இராமசாமி சொல்லிதான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு இருக்கக்கூடிய வாய்ப்பில், ஓர் ஓரமாக நின்று அரசியலில் பயணிப்பது மூலம் டிஏபி தமக்கு ஏற்படுத்திய காயத்திற்கு ஓர் அருமருந்தாக இருக்கலாம் என்றுகூட இராமசாமி நினைக்கலாம். அதற்கு இந்திய சமுதாயத்தின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள உரிமை என்ற அரசியல் கட்சி, அவருக்கு குணம் அளிக்க வல்ல சிறந்த நிவாரணியாக இருக்கலாம் என்றே நினைக்க தோன்றுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்