தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஓடிடியில் ரிலீஸானது

இந்தியா, மே 06-

தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்ட மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் இன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மலையாள சினிமா குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் மலையாள திரையுலகம் தந்த ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படத்தை கேரளாவைக் காட்டிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதற்கு காரணம் இப்படத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள கனெக்‌ஷன் தான்.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. கேரளாவின் மஞ்சும்மல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது, அங்குள்ள குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அப்போது ஒருவர் எதிர்பாராத விதமாக அங்குள்ள குழியில் விழுந்து விடுகிறார். அவரை எப்படி காப்பாற்றினர் என்பதை விறுவிறுப்பு குறையாத திரைக்கதையுடன் படமாக்கி இருந்தனர்.

இப்படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமைந்தது அதன் கிளைமாக்ஸ் என்றே சொல்லலாம். கிளைமாக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல், பலரையும் புல்லரிக்க வைத்தது. இதுவரை காதலர்களால் கொண்டாடப்பட்டு வந்த அப்பாடலை நண்பர்களின் தேசிய கீதமாக மாற்றி இருக்கிறது மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்தை தமிழ்நாட்டு ரசிகர்களை போல் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பார்த்து படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினர்.

பாக்ஸ் ஆபிஸில் முதன்முறையாக 200 கோடி வசூல் என்கிற மைல்கல் சாதனையை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இன்று ஓடிடியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட ஆகிய மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. தியேட்டரை போல் ஓடிடியில் இப்படம் என்னென்ன சாதனைகள் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்