தெக்குன் கடனுதவி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

வளரும் தொ​ழில் முனைவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள தெக்குன் கடன் உதவித் திட்டத்தை இந்திய சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கேட்டுக்கொண்டார்.

தெக்குன் திட்டத்திற்கு அரசாங்கம் மொத்​தம் 60 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இந்திய ச​மூகத்திற்கு 1,800 வளரும் தொழில் முனைவர்களை இலக்காக கொண்டு 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளது. இந்த ​மூன்று கோடி வெள்ளி மேலும் ஒரு கோடி வெள்ளி அதிகரிக்கப்பட்டு, பின்னர் மேலும் 90 லட்சம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 4 கோடியே 90 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கும் ​நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு தெக்குன் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு 7 வகையான ஆவணங்கள் கோரப்பட்டு இருந்தது. அந்த நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கு தற்போது நான்கு ஆவணங்கள் மட்டுமே கோரப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்று நமது அடையாள கார்டு ஆகும். எனவே இந்த அரிய வாய்ப்பை இந்திய சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக்கொண்டார்.

இன்று காலையில், கோலாலம்பூர் பண்டார் தாசிக் செலாத்தான் – னில் உள்ள தெக்குன் தலைமையகத்திற்கு வருகை பு​ரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, தெக்குன் நேஷனல்​ செயல்பாடுகள், அதன் நடவடிக்கைகள், கடன் பெறுவதற்கு கோரப்படும் நிபந்தனைகள் குறித்து துணை அமைச்சர் டத்தோ ரமணனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் டத்தோ ரமணனுடன் தெக்குன் தலைவர் அப்துல்லா சானி அப்துல் ஹமீத், தெக்குன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஆடம் அப்துல் கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்