பதிவு பெறாத முதலீட்டுத் திட்டங்கள், பணம் முதலீடு செய்தவர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லை

கோலாலம்பூர், மே 03-

மலேசியாவில் பதிவு பெறாத முதலீட்டுத் திட்டங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை நினைவுறுதியுள்ளது.

பதிவு பெறாத முதலீட்டுத் திட்டங்களில் வைப்புத்தொகையை செலுத்துவது அல்லது முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானதாகும். சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்று வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் எச்சரித்துள்ளார்.

குறுகிய காலத்தில் அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம் என்று இது போன்ற பதிவு பெறாத முதலீட்டுத் திட்டங்களை வழிநடத்துகின்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்து லட்சக்கணக்கான வெள்ளியை பலர் இழந்துள்ளனர்.

காரணம், அவர்கள் சட்டவிரோதமாக முதலீடு செய்த அந்தப்பணம் சட்ட ரீதியாக திரும்ப கிடைப்பதற்கு அறவே வாய்ப்பு இல்லை என்று ரம்லி முகமது யூசுப் நினைவுறுத்தினார்.

சட்டவிரோத முதலீட்டுத் திட்டத்தில் பங்கு கொண்டு ஆயிரக் கணக்கான வெள்ளியை வைப்புத்தொகையாக செலுத்திய 79 பேருக்கு சொந்தமான 11 லட்சத்து 12 ஆயிரத்து 700 வெள்ளியை திரும்ப பெறும் உரிமையை ரத்து செய்யுமாறு பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்திற்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை ரம்லி முகமது யூசுப் சுட்டிக்காட்டினார்.

இதன் பொருள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொந்தமான அந்தப் பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்கப் போவதில்லை. அந்தப் பணம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்க்கு மைமுன் துவான் மாட் தீர்ப்பு அளித்து இருப்பதை ரம்லி முகமது யூசுப் விளக்கினார்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்