பன்முக வித்தகர் எஸ்.எஸ். சர்மா

சிங்கப்பூரின் முன்னோடி இதழாளராகவும் நாடகவியலாளராகவும் அறியப்பட்டவர் எஸ்.எஸ். சர்மா. சிங்கப்பூர், மலேசியாவில் ‘ஷா பிரதர்ஸ்’ நிறுவனம் நடத்தி வந்த இந்திய ‘மூவி நியூஸ்’ மாதாந்திர சஞ்சிகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகப் பணியாற்றியவர்.
‘இந்தியா மூவி நியூஸ்’ இதழில் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர்; பலரது சிறுகதைகளை வெளியிட்டவர். நாடகத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இவர்
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பாலர் சேனையில் பணியாற்றி இருக்கிறார். இவர் 1930இல், மலேசியாவில், காரை நகர் சே.மு.சாம்பசிவ ஐயர்-செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பகாங், கோலாலிப்பீஸில் உள்ள கிளிபோர்ட் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். அதன் பின், சிரம்பான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பள்ளியில் இறுதி ஆண்டுப் படிப்பை முடித்தார். மலேசியாவில் ஜப்பானிய ஆட்சியின்போது ஜப்பான் மொழியைக் கற்றார்.
எஸ். எஸ். சர்மா தமிழ் முரசு, தமிழ்நேசன், வீரகேசரி, ஈழகேசரி, பேசும்படம் இதழின் ‘திங்கள்’ மாத இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். தமிழ்மலர், மலேசியா மலர், வேல், மயில், ‘சில்வர் ஸ்க்ரீன்’ போன்ற இதழ்களின் கேள்வி பதில் அங்கத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.
ஆன்மிக மாநாட்டு மலர்கள், ஆலயக் குடமுழுக்கு மலர்களிலும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார். பல நாடுகளுக்குப் பயணம் செய்து, அதன் அனுபவங்களைப் பயணக்கட்டுரை நூல்களாக எழுதியுள்ளார். தாம் நடத்திய நாடகங்களை நூல்களாக்கி வெளியிட்டுள்ளார். பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகள், எழுதியுள்ள சர்மா, நாவல்களும் 25க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
93ஆவது வயதை எட்டியுள்ள எஸ்.எஸ். சர்மா, தமது இளமை காலத்தில் ‘ஷா பிரதர்ஸ்’ திரைப்பட நிறுவனத்தின் ‘இந்திய மூவி நியூஸ்’ மாதாந்திர சஞ்சிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று அந்தத் திரைப்படச் சஞ்சிகை, சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அதிக விற்பனைக்குரிய சஞ்சிகையாக மாற்றுவதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
1970ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் அவர்களின் சுய தயாரிப்பில் உருவான உலகம் சுற்றும் வாலிபன், திரைப்படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ‘ஷா பிரதர்ஸ்’ நிறுவனத்திற்குத் துணையாக இருந்து ஆக்கப் பணிகளைக் கவனித்துக் கொண்டார் எஸ்.எஸ். சர்மா. 1957ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31ஆம் தேதி மலேசியா சுதந்திரம் அடைந்த நாளில், எஸ்.எஸ். சர்மா கதை வசனம் எழுதிய ‘பவானி’ என்ற நாடகம் மலேசியாவிலுள்ள ஐந்து ஊர்களில் அரங்கேறியது. தொடர்ந்து, இவர் ’பாஞ்சாலி சபதம்’ உள்ளிட பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். சர்மா கலை குழுவைத் தோற்றுவித்து அதன் மூலம் பல கலைநிகழ்ச்சிகளை முன்னெடுத்தார். இந்தோனேசியாவுக்கு மூன்று முறை தமது கலை குழுவுடன் பயணம் மேற்கொண்டு பல நாடகங்களையும் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இலங்கை, தமிழ்நாடு, சீசெல்ஸ் நாடுகளிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
எஸ்.எஸ். சர்மா, சிங்கப்பூரில் இயல், இசை, நாடகக் கலை திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியக் கலை மன்றத்தை 1968இல் தொடங்கினார். ‘அனார்கலி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அம்ரபாலி’, ‘சியாமா’, ‘சகுந்தல’ போன்ற நாட்டிய நாடகங்களை அரங்கேற்றினார். சிங்கப்பூர் தேசிய நாடக விழாவில் சர்மா கதை, வசனம், எழுதி, இயக்கிய ஏழு நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. ‘சிங்கப்பூர் இரவு’ என்ற கலை நிகழ்ச்சியைச் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடத்தினார். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் சர்மாவின் நாடகங்கள் பல ஒலிபரப்பாகின. தமது நாடக அனுபவங்கள் பற்றி சர்மா எழுதியிருக்கும் ‘நாடகம் நடத்தினோம்’ நூல் குறிப்பிடத் தகுந்த ஒன்று.
ஹாய் ஹாவாய்!, பூபாளம் பாடும் நேபாளம், கும்பகோணம் மாமாங்கம், கம்போடியாவில் கலை கோயில்கள், ஈழத்தில் இனிய நாள்கள், காஞ்சியின் மகிமை, சுமத்ரா ஒரு சுவர்க்கம், சீசெல்ஸ் நாட்டில் சில நாள்கள்!, தமிழ் நாட்டில் எட்டு நாள்கள், அடேயப்பா ஐரோப்பா போன்ற பயணக்கட்டுரைகளைச் சர்மா இயற்றியுள்ளார்.
சர்மாவின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் அரிஸோனா பல்கலைக்கழகம் கெளரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தமிழவேள் விருது வழங்கி சிறப்பித்துள்ள வேளையில், சிங்கப்பூர் இந்தியா நுண்கலைக் கழகம் கலாரத்னா விருது வழங்கிச் சிறப்பு செய்துள்ளது. அகில இந்திய தமிழ் எழுத்தாளர் கழகம் இலக்கிய கலை செம்மல் விருது வழங்கிச் சிறப்பு செய்துள்ளது.
93 வயதான சர்மாவுக்கு மனைவி வசந்தி; சாந்தி, ஜெயந்தி என இரு மகள்கள்; ஆனந்த் என ஒரு மகன், என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்