பினாங்கு தைப்பூச விழா கொண்டாட்டத்தில் இந்து மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம்

*பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்து*

வரும் ஜனவரி மாதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு தைப்பூச விழாவில் அதன் ஏற்பாடுகள் குறித்து , பினாங்கு நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்துடன் ஒற்றுமையாக, ஒன்றுப்பட்ட நிலையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் இந்து மக்களிடையே பிளவுகளையும் பேதங்களையும், பிரிவினையும் விதைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் தைப்பூச விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தங்க ரதத்திற்கும், நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தின் வெள்ளி ரதத்திற்கும் இடையில் மீண்டும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று, நேற்று செய்தி வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும். தவறானதாகும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார்.

இன்று பினாங்கில் இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் தண்ணீர்மலை நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் பொறுப்பாளர்களுடன் இணைந்து அறவாரியத்தின் இதர ஆணையாளர்கள் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆர்.எஸ்.என் ராயர் இதனை குறிப்பிட்டார்.

பினாங்கு தைப்பூச விழா கொண்டாட்டத்தின் போது இந்து அறப்பணி வாரியத்தின் தங்க ரத ஊர்வலம் நிறுத்தப்பட வேண்டும் என்று நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தினர் எந்த சமயத்திலும் கோரிக்கை விடுத்ததில்லை என்பதையும் ஆர்.எஸ்.என் ராயர் தெளிவுபடுத்தினார்.

அவ்வாறு கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக தாம் பொறுப்பேற்ற பிறகு அதன் ஆணையர்களின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்துடன் அணுக்கமான நல்லுறவு பேணப்பட்டு வருவதுடன், தைப்பூச விழாவில் ஒற்றுமையாக, தங்க ரதம் , வெள்ளி ரதம் ஊர்வலகங்கள் சுமூகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பும் பேசி வருவதுடன் எவ்வாறு இரு ரதங்களையும் விரைவாக கோயில்களில் சேர்ப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.என் ராயர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகளாக லக்சமணன் சண்முகம், மெய்யப்பன், வீரப்பன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் சார்பில் பேசிய லக்சமணன் சண்முகம், தைப்பூச விழா ஏற்பாடுகள் தொடர்பில் தங்களுக்கும், இந்து அறப்பணி வாரியத்திற்கும் இடையில் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இச்செய்தியாளர் கூட்டத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன், சந்திரமோகன், சண்முகநாதன், டத்தோ J. தினகரன் உட்பட இதர ஆணையர்களும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்