பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக்கப்பட வேண்டும்- ஜெய்த் இப்ராஹிம் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, மே 03-

UITM எனப்படும் MARA தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருதய அறுவை சிகிச்சை தொடர்பான முதுகலை கல்வியில், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இடமளிப்பது குறித்து இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என உயர்கல்வி அமைச்சர் ஜாம்பிரி அப்துல் கதிர் கூறியுள்ளதை, முன்னாள் சட்ட அமைச்சர் ஜெய்த் இப்ராஹிம் இன்று கடுமையாக சாடினார்.

UMNO மீதான பயம் காரணமாகவே, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறிய ஜெய்த் இப்ராஹிம், அந்த பரிந்துரையை அக்கட்சியினர் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமென, தனது X பதிவில் அவர் வலியுறுத்தினார்.

1970ஆம் ஆண்டுகளில் மலாய் அல்லாதவர்கள் மருத்துவர், தாதியர், விரிவுரையாளர் போன்ற துறைகளை ஆக்கிரமித்திருந்த சூழலைக் கண்டு பயந்திருந்த UMNO, தற்போதும் அந்த பயத்துடன் நாட்டை வழிநடத்துவதும் சரியல்ல என்றார் அவர்.

பூமிபுத்ராக்களுக்காக தொடங்கப்பட்ட UITM பல்கலைக்கழகம் தொடங்கி, நாட்டிலுள்ள அனைத்து கல்வி கழகங்களும் தகுதியுள்ள அனைத்து மலேசியர்களுக்கும் கல்வி பயில்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

நாட்டின் பொது சுகாதார பராமரிப்பு துறையில், தற்போது, போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லாத சூழல் நிலவுவதால், அந்நடவடிக்கை பூமிபுத்ராக்களுக்கே பெரும் ஆதாயத்தை அளிக்கும்.

நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வந்தாலும்கூட, அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கான நிதி ஆற்றலை அரசாங்கம் கொண்டுள்ளது.

ஆகையால், கல்வி கழகங்களில் பாகுபாடு பார்க்காமல், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டுமென ஜெய்த் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்