ரிங்கிட்டின் வீழ்ச்சி, 1998 ஆம் ஆண்டுடன் ஒப்பிட வேண்டியதில்லை பிரதமர் விளக்கம்

மலேசியாவின் தற்போதைய பொருளாதார நிலை, 1998 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததைப் போன்று அல்ல என்பதால் அந்த ஆண்டுடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

மலேசிய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, வலுவான அடித்தளத்தை கொண்டுள்ளது. நாட்டின் முதலீட்டு மதிப்பு, இதுவரை பதிவு செய்யப்படாத அளவிற்கு அதிகபட்சமாகவும், மிக உயர்வாகவும் இருப்பதைக் காட்டுகிறது என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ரிங்கிட்டின் மதிப்பு , இன்னமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை, 1998 ஆம் ஆண்டு இவ்வட்டாரத்தை உலுக்கிய ஆசிய நிதி நெருக்கடியுடன் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. காரணம், அப்போது ஏற்பட்ட நிதி நெருக்கடியில் ரிங்கிட்டும் வீழ்ச்சியுற்றது. முதலீடும் வீழ்ச்சியுற்றது. இதன் தாக்கம், பணவீக்கமும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது.

அதுமட்டுமின்றி, 1998 ஆம் ஆண்டில் நாட்டின் நிதி அமைச்சர் என்ற முறையில் தமக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வது என்பது அக்காலக்கட்டத்தில் மிக கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால், தற்போது நிலை அப்படி அல்ல. முற்றிலும் மாறுப்பட்டு இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நாடு பெற்றுள்ளது. புதிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் வளர்ச்சி நிலையாகவும், வலுவாகவும் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மூவாயிரத்து 295 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டான 2022 இல் பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 646 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டில், இது 23 விழுக்காடு உயர்வாகும் என்று பிரதமர் விளக்கினார்.

எனவே ரிங்கிட் வீழ்ச்சியின் தாக்கம் இருந்தாலும் நாட்டின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நிலையான வளர்ச்சிக்குரிய அறிகுறிகளாகும் என்று பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்