பேரறிஞர் அண்ணா 1965ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரிந்தபோது ஜூலை திங்கள் 18ஆம் நாள் கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் அன்றைய தொழிலாளர் அமைச்சர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் தலைமையில் மாபெரும் விழா எடுக்கப்பட்டது.
சுமார் 15 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றிய அறிஞர் அண்ணா. “நீங்கள் மொழியால் தமிழராக இருந்தாலும் நாட்டால் மலேசியர்கள். இந்த நாட்டின் குடிமக்களாக வாழுங்கள் என்றார். அரங்கத்தில் நிரம்பியிருந்த அதிகமான மலேசியர்களுக்கு அறிவுரையும் அண்ணா வழங்கினார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து முதலிய நாடுகளில்
ஆங்கிலேயர்கள் குடியேறிய போதிலும் அவர்கள் இப்போது அந்தந்த நாடுகளில் குடிமக்களாக தங்கள் வாழும் நாட்டுக்கே முழு விசுவாசம் செலுத்துகின்றனர். அவர்கள் பேசும் மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தங்களை அவர்கள் ஆங்கிலேயராக கருதுவதில்லை. அவர்கள் தங்களை ஆஸ்திரேலியர்களாகவும்
அமெரிக்கர்களாகவும், நியூசிலாந்துகாரர்களாகவும் மட்டுமே கருதுகின்றனர் என்று அண்ணா சொன்னார்.
பீஜியிலும், பர்மாவிலும் (மியன்மார்). இலங்கையிலும், தென்னாப்பிரிக்காவிலும் உலகின் இன்னும் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வாழுகின்றனர். ஆனால், மலேசியாவில்தான் தமிழர்கள், தமிழர்களாக வாழ்கின்றனர்.
அவர்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய மலர்ந்த மகிழ்ச்சியான முகங்களைக் காணுகிறேன். வேறு பல நாடுகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று அண்ணா கூறினார்.
பரந்த நோக்கமும், உயர்ந்த தன்மையும் கொண்ட பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் அமைந்த மலேசிய அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக அண்ணா மனதார பாராட்டினார். இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே உள்ள ஒற்றுமையையும், தொடர்புகளையும் அண்ணா தமது ஒரு மணி நேர உரையில் விவரித்தார். “உங்கள் நாடான மலேசியாவிலும் பல மொழிகள் பேசப்படுகின்றன. எங்கள் நாடான இந்தியாவிலும் பல மொழிகள் உள்ளன. உங்கள் நாட்டிலும் பல இனங்கள் உள்ளன. அதேபோல் எங்கள் நாட்டிலும் பல இனங்கள் இருக்கின்றனர். நீங்கள் எப்படி இந்த வேற்றுமைகளில் ஒற்றுமையை வளர்க்கிறீர்கள் என்பதை
ஆராயவும், அறிந்து கொண்டு இந்தியாவில் அதைப் பரப்பவும் ஆவல் கொண்டுள்ளோம். மலேசியாவிலும் இந்தியாவிலும் நாடாளுமன்ற மக்களாட்சி பின்பற்றப்படுகிறது. மக்களுரிமைகள் மதிக்கப்படுகின்றன. இத்தகைய மக்களாட்சியில் பல தொல்லைகள் இருந்தாலும் அதன் வலிமை, நன்மையை நாம் இழந்து விடக்கூடாது. பல நாடுகளில் இத்தகைய மக்களுரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஒரே கட்சிதான் ஆளும் என்கிறார்கள்.
உங்களைப் பொறுத்தவரை எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் அவற்றை தீர்த்து வைக்கக்கூடிய திறமையான, இளமையான, ஊக்கமிக்க தலைமைத்துவம் உங்களுக்கு இருக்கிறது. போதுமான அளவுக்கு அறிவுடைமையும் திறமையும் மிக்க தலைமைத்துவம் உங்களுக்கு இருப்பது நீங்கள் பெற்ற பேறாகும். பல்வேறு இன மக்கள் வாழும் இந்நாட்டில் பலவித கொள்கைகளும், கருத்துகளும் தனித்தனியாக இருப்பினும் மலேசியாவைக் காக்கும் எண்ணத்தில் எல்லா வேறுபாடுகளையும் மறந்து இந்த நாட்டைக் காக்க வேண்டும்.
ஆசியாவிலேயே வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நாடு, உங்கள் நாடு. இயற்கை வளமும், அதனை மக்கள் வெளிக்கொணர்ந்து இயங்க வைக்கும் தன்மையுமே, உங்கள் நாட்டை வாழ்க்கை தரம் உயர்ந்த நாடாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை உங்களைக் காணும்போது என் மனத்திற்குப் பட்டது. வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு மலேசியாதான். இங்குதான் பத்து லட்சம் பேர் வாழுகின்றனர். முழு உரிமை பெற்றவர்களாக நீங்கள் வாழ்வதைக் காண நான் பெருமைப்படுகிறேன்.
இந்தியா நானிருக்கும் நாடு. மலேசியா நீங்கள் இருக்கும் நாடு. இந்த உணர்வுடன் நாட்டை முன்னேற்ற பாடுபடுங்கள். ஆட்சியாளருக்கு நன்றி சொல்லி பழக்கமில்லாத நான், திறமைமிக்க இந்நாட்டு ஆட்சியாளருக்கு நன்றி கூறுகிறேன். அவர்களது திறன்மிக்க ஆட்சி முறைகளுக்காக என்று அறிஞர் அண்ணா தமது உரையில் குறிப்பிட்டார்.