மலேசியாவில் நுழைவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்யாத அந்நிய நாட்டு சுற்றுப்பயணியின் விவகாரத்தை தீர்த்து வைப்பதாக கூறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த சுற்றுப்பயணியிடமிருந்து 18 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக கோரியதாக கூறப்படும் ஏஜெண்டு ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தேடி வருகிறது.
விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன நாட்டு சுற்றுப்பயணியான பெண்மணி ஒருவர், திரும்புவதற்கான ரிட்டன் டிக்கெட்டை கொண்டு இருக்காதது மற்றும் மலேசியாவில் தங்குவதற்கான இடத்தை குறிப்பிடாதது போன்ற காரணங்களால் குடிநுழைவுத்துறை அதிகாரியால் தடுத்து வைக்கப்பட்டு, லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒரு பகுதியாக அந்த ஏஜெண்டை எஸ்பிஆர்எம் தேடி வருவதாக அதன் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.