கெடா, லூனாஸ் சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டால், தொகுதியில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் தங்கியிருக்கும் பிள்ளைககளின் கல்விக்காக தனி மானியம் ஒதுக்கப்படும் என்று தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆதரவற்ற இல்லங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கும் வகையில் அவர்களின் கல்வித் தேவைகளுக்கு இந்த சிறப்பு மானியம் ஒதுக்கப்படும் என்று லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் சாவி சின்னத்தில் போட்டியிடும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
லூனாஸ் வட்டாரத்தில் தாமான் செலாசே வில் இயங்கி வரும் பக்தி யோங் ஐ என்ற ஆதரவற்ற்ற சிறார் இல்லத்திற்கு இன்று வருகை புரிந்த சுயேட்சை வேட்பாளர் அரிச்சந்திரன், அந்த இல்லத்தில் உள்ள சிறார்களை சந்தித்தப் பின்னர் அதன் நிர்வாகம் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை நேரடியாக கேட்டறிந்தார். அதேவேளையில் இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பேசினார். இந்த இல்லத்தில் 12 சிறார்கள் தங்கியுள்ள வேளையில் இந்த ஆதரவற்ற இல்லம் சில வேளைகளில் உணவுப்பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதையும் அதன் பொறுப்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர் அரிச்சந்திரனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.