1எம்.டி.பி நிதி முறைகேட்டில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோவுடன் , தமது கணவர் டத்தோ டாக்டர். தௌபிக் அய்மன் மிக நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார் என்று கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய பொருளகமான பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் டான் ஸ்ரீ ஜெட்டி அக்தர் அஜீஸ் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மறுத்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான 1எம்.டி.பி நிதிமுறைகேடு வழக்கில் முக்கிய சாட்சியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சாட்சியம் அளித்து வரும் ஜெட்டி அக்தர் அஜீஸ் ஸிடம், நஜீப்பின் வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்றுள்ள முதன்மை வழக்கறிஞர் முஹம்மது ஷஃபீ அப்துல்லா வின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அந்த மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் மேற்கண்டவாறு பதிலை அளத்தார்.
ஜெட்டி யின் கணவருக்கும், தேடப்பட்டு வரும் ஜோலோவிற்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது என்றும், அந்த தொடர்பு எந்தெந்த வகையில் இருந்துள்ளது என்பது குறித்து சில சம்பவங்களை நீதிமன்றத்தில் விவரித்த ஷஃபீ அப்துல்லா, ஜோலோவை உங்களுக்கு தெரியுமா? என்ற ஒரு கேள்விக்கு, “தெரியாது ” என்று ஜெட்டி பதில் அளித்தார். அதேவேளையில் அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
ஜோ லோவிடமிருந்து விலை உயர்ந்த பரிசுகளை ஜெட்டி பெற்றுள்ளார் என்பதற்கு சில சம்பவங்களை உதாரணம் காட்டி, ஷஃபீ அப்துல்லா முன்வைத்துள்ள வாதத்தையும், மத்திய வங்கியின் அந்த முன்னாள் உயர் அதிகாரி வன்மையாக மறுத்துள்ளார்.