கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தில் புழங்கிய நாணயங்கள் ‘சங்க காலத் தமிழகக் காசுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான நாணயங்கள் செம்பினாலும் சதுர வடிவத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இதில் வட்ட வடிவ நாணயங்களாக கி.பி. 1 முதல் 3 ஆம் நூற்றாண்டில் வெளியான பிற்பகுதி சங்க கால நாணயங்களாக கருதப்படுகின்றன.
தமிழக மன்னர்கள் புலவர்களையும், பாணர்களையும் ஆதரித்தனர் என இலக்கியங்கள் வாயிலாகவும், ஆற்றுப்படை நூல்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறு புலவர்களும், பாணர்களும் அரசனை வாழ்த்திக் கூறும்போது அவர்களுக்கு மன்னர்களால் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசுப் பொருட்களுடன் பொற்காசுகளும் அன்பளிப்பாக தரப்பட்டன.
5 வகை சங்க கால நாணயங்களாக சங்க கால சேரர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க கால சோழர்கள் வெளியிட்ட நாணயங்கள், மலையமான் என்ற குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள், அதிரன் எதிரான் சேந்தன் என்ற ஒரு குறிப்பிட்ட குறுநில மன்னன் வெளியிட்ட நாணயங்கள் போன்று கண்டெடுக்கப்பட்டன.
பிற்காலத்தில் நாணயங்கள் அளவான கழஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதை கல்வெட்டினால் அறியலாம். சங்க காலத்தில் ரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான வியாபாரம் நடைபெற்றதற்குச் சான்றாக ரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. திண்ணம், எதிரான் சேந்தன் என்ற பிராமிய எழுத்துக்களோடு காசுகள் கிடைத்துள்ளன. பொருட்களின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உலோகங்கள் குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன.
பொதுவாகவே ஒரு பக்கத்தில் இந்த நாணயத்தை வெளியிட்ட அரசுகளின் ஆட்சித் சின்னம்தான் காணப்படும். உதாரணத்திற்கு, சேரர் காசுகளில் வில், சோழர் காசுகளில் புலி, மற்றும் பாண்டியர் காசுகளில் மீன் போன்று அறியப்படும். மற்றொரு பக்கத்தில் பிற சின்னங்கள் காணப்படும்.
சங்க காலக் காசுகளில் மறு பக்கத்தில் பொறிக்கப்படும் சின்னங்களில் பிரதானமாக உள்ள ஒரு சின்னம்தான் யானை. மூவேந்தர்கள் அனைவரும் யானையைதான் அதிகம் சங்க கால காசுகளில் பொறித்து உள்ளனர்.
இந்த யானை சின்னங்கள் தனியாகவும் குதிரை, மங்கலச் சின்னங்கள், காவல் மரம் போன்றவைகளுடன் சேர்ந்தும் காணப்படுகிறது.
சோழர் கால நாணயங்களில் புதிய உருவங்கள் ஏதாவது கிடைக்கின்றனவா என்று பல ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.
அவ்வாறு ஆய்வு மேற்கொண்ட போது யானைக்குப் பின் தெளிவற்ற செங்குத்தான உருவம் உள்ள சில காசுகளையும் கண்டறிந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஓரளவுக்கு தெளிவான உருவம் உள்ள நாணயம் ஒன்று கிடைக்கப் பெற்றது.
அதில், யானையின் மீது வெண்கொற்றக் குடையும் குடைக்குக் கீழே ஶ்ரீவத்ஸ சின்னமும் இருப்பதை அறிந்தனர்.
யானைக்குப் பின் மனித உருவம் போன்ற ஓர் உருவம் காணப்பட்டது. ஆனால், அந்த உருவம் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியப்படவில்லை. அந்த தெளிவில்லாத மனித உருவத்தோடு இன்னும் 5 நாணயங்கள் கிடைத்தன.
கிடைக்கப் பெற்ற தெளிவான நாணயத்தில் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சங்ககாலச் சோழர் காசுகளில், யானைக்குப் பின்புறம் நிற்கும் மனித உருவம் ஒன்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த சின்னத்தில் இருக்கும் மனித உருவம் கைகளை மேலே தூக்கி வணங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த மனித உருவத்திற்கு முன் காட்சியளிக்கும் யானை உருவம் ஒரு கோயில் யானையா அல்லது வழிபாட்டிற்கு உரிய யானையா என்று கேள்வி தோன்றியது.
இதற்கு முன்பு கண்டெடுத்த இதுபோன்ற நாணயத்தில் யானைக்கு மேலே ஒரு குடைக்குக் கீழே ஶ்ரீவத்சம் சின்னமும் தெளிவாக இருந்தது தெரியவந்தது. இந்த கண்டுபிடிப்பும் அந்தக் குறிப்பிட்ட யானை கோவில் யானையாக இருக்குமா என்ற சந்தேகமும் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டது.
இந்த யானை எந்த மதத்து மக்களால் வழிப்படப்பட்டது என்பதனையும் சங்க காலத்தில் நடந்த ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தினை அவை நினைவுக்கூறுகின்றதா என்பதையும் தெளிவாக உணர முடியவில்லை. அதுபோன்று யானையின் பின் நிற்பவரும் சாதாரணக் குடிமகனா, பாகனா, அரசரா என்று தேடப்படுகின்றன.
இதற்கு முன் சோழர்களின் ஒருவகை சங்க கால நாணயத்தில் மட்டும்தான் அதில் காணப்படும் யானை சின்னம் பட்டத்து யானை என்று உறுதி செய்யப்பட்டது. அந்த காசு சோழர்கள் தங்கள் தலை நகரத்தைத் தேடி பட்டத்து யானையில் போகும்போது, அந்தப் பட்டத்து யானையை ஒரு கோழி கொத்திக் கொன்ற வரலாற்றோடு ஒப்பிடப்பட்டதாகும்.
இந்த வரலாற்றினால்தான் சோழர்களின் தலை நகரம் கோழியூர் எனப் பெயர் பெற்றது. இப்போது சோழர் காசுகளில் பட்டத்து யானையோடு கோவில் யானையும் இருந்திருக்கலாம் என்ற முடிவினை இந்த புதியதொரு நாணயம் அளிக்கிறது.
சோழர்கால நாணயத்தில் காணப்பட்ட யானைகள் அனைத்தும் சங்க கால அரசர்களின் படை பலத்துக்கான குறியீடாக மட்டும்தான் ஆய்வாளர்கள் கருதி வந்தனர்.
ஆனால் அந்த யானைகள் சங்க கால பக்தியின் குறியீடாக இருக்குமோ என்ற ஐயத்தை இந்த கும்பிடும் நிலையில் உள்ள மனித உருவம் எழுப்பி உள்ளது.