சங்கங்களும் திருவிழாக்களும், சமுதாயத்தை இணைக்கும் சக்தியாக மட்டுட்டுமின்றி, மனிதர்களை இயற்கையோடும் காலத்தோடும் இணைக்கும் சங்கிலிகளாகவும் உள்ளன. குறிப்பாக, தமிழ் மாதங்கள் எல்லாம் பௌர்ணர்மியுடன் இணைத்துப் பெயரிடப்பட்டுள்ளன. சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியில் வருவதால் சித்திரை மாதம் என்றும்; வைகாசி, விசாக நட்சத்திரத்தை ஒட்டியும்; மார்கழி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தை ஒட்டியும் பெயர் பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்கள் முருகன், சிவன் போன்ற தெய்வங்களுக்குப் புனிதமானவையாகப் போற்றப்படுகின்றன.

காலச் சுழற்சியைக் குறிக்கும் நாளும், பருவமும் மனித வாழ்வின் சந்தங்களோடு இணைக்கப்படுகின்றன. காலச் சக்கரத்தின் சுழற்சியில், நிரந்தரம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. வாழ்வு, புத்தாடை புனைந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. தொல்காப்பியம், காலப் பகுப்பையொட்டி காதல் வாழ்வு நிலைகளைக் காட்டுகிறது. இளவேனில் காலத்தைப் புணர்ச்சியோடும், கார் காலத்தை இருத்தலோடும், வேனிற்காலத்தைப் பிரிவோடும், ஊடலையும் இருத்தலையும் இணைக்கின்றது. ஐந்திணைகள் ஒவ்வொன்றுக்கும் சேயோன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை எனத் தனித்தனிக் கடவுள்கள் உள்ளன.

தமிழ் மரபில், மார்கழி மாதம் திருமாலுக்கும், சிவனுக்கும் உரிய மாதங்களாகக் கருதப்பட்டு, மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை இசைத்துத் கூட்டு வழிபாடு, நெடுங்காலமாக நடந்து வருகிறது. மாதங்களிலே நான் மார்கழி என்று கண்ணனாலே சிறப்பிக்கப்படும் மாதத்தில், கோபியர்கள் கண்ணனைச் சிறப்பித்து பாடி, நோன்பு நோற்று, மழையையும் நல்ல கணவரையும் வேண்டுகிறார்கள். அதேபோன்று, திருவெம்பாவையில் சிவனடியார்கள் முன்னை பழமைக்குப் பழமையாகவும் பின்னைக்குப் பெயர்த்து பெற்றியனாக உள்ள சிவன் புகழ் பாடி புனலாடுகின்றனர். இரண்டிலும் இயற்கை வழிபாடு இறை வழிபாடாக மலர்ந்தாலும் அடிப்படையில் செழிப்பு தொன்மத்தின் விளக்கமாக உள்ளன. மழையும், பொய்கையும் கடவுளின் கருணையின் குறியீடுகளாகின்றன.
திருப்பாவை, திருவெம்பாவையின் தொடர்ச்சியான திருப்பள்ளியெழுச்சி ஆகிய மூன்றுமே இறையருளால் வாழ்வு வளம் பெறுவதைக் கூறி முடிகின்றன. திருப்பாவை செங்கண் திருமுகத்துத் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்றும்; திருப்பள்ளியெழுச்சி மெய்யன்பையும், நீயும் அவனியிற்புகுந்து எமை ஆட்கொள்ளவல்லாய் என்றும் நிறைவு பெறுகின்றன.
இதன் தொடர்ச்சியாகவே தைப்பொங்கலைச் சமயச் சார்பு மிகுதியில்லாத வழிபாட்டு விழாவாகக் கருத வேண்டும். சங்க காலத்தின் நீராடல் பற்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ஓர் ஆய்வுக் கட்டுரையில் எழுதியுள்ளார். ‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்று புறநானூறும், ‘தைஇ நின்ற தண்பெயற் கடை நாள்’ என்று அகநானூறும் கூறுவதைக் காட்டுகிறார். இப்போது மகளிரே நீராடினர் என்றும் கூறுவார்.
சங்க காலத்திற்குப் பிறகு, எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் மார்கழி நீராடல் சமய உணர்வுள்ள மார்கழி நீராடலாயிற்று. பரிபாடலிலும் கலித்தொகையிலும் தை நீராடலே சமய உணர்வோடு பேசப்படுகிறது. திருவாதிரையன்று இது தொடங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நாள் என்று ஆண்டாள் தொடங்குவதால், இது மார்கழி பௌர்ணமியில் தொடங்கியிருக்க வேண்டும். எது எப்படியாயினும் தை முதல் நாள் விழாவை மார்கழி நோன்பின் தொடர்ச்சியெனக் கொள்வதில் தவறில்லை. தை முதல் நாள் பொங்கல் திருநாளாக நீண்ட காலமாகவும், அண்மைய காலமாகத் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இஃது அடிப்படையில் இயற்கையோடு இணைந்த சூரியனை வழிபடும் திருநாள்; உழைப்பைப் போற்றும் பெருநாள். பொதுவாக, தமிழ் மாதங்கள் திங்களின் இயக்கத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. ஆனால், தை மாதப் பிறப்பு, சௌர மானம் என்ற சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கு முறையை ஒட்டியுள்ளது. உத்தராயணம் அல்லது சூரியனின் வடதிசை பயணம் தை முதல் நாளில் நிகழ்வதால், தைப்பொங்கல் சூரிய வழிபாடாகவும் உள்ளது. சூரியனால் உயிர்களும் உழவும் சிறப்புறுவதால் அவன் புத்தொளி வீசி வருவதைக் கொண்டாடும் வகையில் அறுவடைக்குப் பின் புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பொங்கல் வைத்து, அவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். போகியில் பழையன கழிந்து, பொங்கலில் புதியன பொலிகிறது. அறிஞர் தெ.பொ.மீ. கருத்துப்படி, மனிதனுடைய சிறப்பு கூடி உழைத்து, கூடி வாழ்ந்து, கூடி அனுபவித்தலே பொங்கல் திருநாள். மனிதனோடு உழைத்த மாடுகளுக்கு நன்றி நவிலும் வகையில் மாடுகளுடன் கூடிக் கொண்டாடப்படும் இது தலைச்சிறந்த கூட்டுறவுத் திருநாளாகும். மேலும், இத்திருநாளைச் சாதி, மதப் பேதமின்றி அனைவரும் இணைந்து கொண்டாடுவதால் இதை ஒரு சமரச, சமதர்ம, சமநிலை திருவிழா என்றும் அவர் கூறுவார்.
தமிழர்களின் இயற்கை மற்றும் உழைப்பைப் போற்றும் நெறியின் வெளிப்பாடாக உள்ள பொங்கல் விழா, தமிழர் திருநாளாக மாறியதில் வியப்பில்லை. சென்ற நூற்றாண்டில் தமிழின் மறுமலர்ச்சி பல நிலைகளிலும் நிகழ்ந்ததன் ஒரு பகுதியே இது. இது, தமிழகம் கடந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற மற்ற உலக நாடுகளிலும் சிறப்பாகத் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது இலக்கியம், மொழி சார்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெற தொடங்கின.
தமிழர் திருநாளையொட்டி வரும் ஜல்லிக்கட்டும் பண்டைய தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்த வீர விளையாட்டே. இஃது ஏறுதழுவல் என்று முல்லைக்கலியில் கூறப்பட்டுள்ளது. இந்த விழாவும், காளைகளும் இளங்காளைகளும் இணைந்து வாழ்ந்ததன் எடுத்துக்காட்டே. இப்படி உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த விழாவுக்கு அடுத்து, உலகத் தமிழரின் முழுமையான அடையாளமாக உள்ள திருக்குறளைப் போற்றும் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுவதும் இயல்பே. திருக்குறளும் உழவுத் தொழிலைப் பெரிதும் போற்றுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலைத் தலையாய பண்பாடாகக் கூறுகிறது. ஒரு நாட்டின் சிறந்த செல்வமாகத் தள்ளா விளைவுளைக் குறிக்கிறது. மாடு என்ற சொல்லைச் செல்வம் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக அறம், பொருள், இன்பம் என்ற தமிழர் வாழ்வின் முப்பெரும் கூறுகளை முப்பாலாகக் காட்டுகிறது.
தனிமனித, குடும்ப வாழ்வை அறமாகவும், சமூக வாழ்வைப் பொருளாகவும், காதலை இன்பமாகவும் குறள் வகுத்துள்ளது. ஓர் அறநூலிலே காதலின் நுணுக்கங்களை விரிவாக ஆனால், நெறி தவறாமல் கவித்துவத்தோடும், நாடகப் பாங்கோடும் காட்டுவது ஒரு புரட்சியே. ஊடல் நுணுக்கத்தை ஓர் அதிகாரம் முழுதும் கூறிவிட்டு, ஊடுதல் காதற்கின்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்று, இன்பம் இன்பம் என்று இரண்டு முறை கூறி முடிகிறது. திருக்குறள் உயிர் இறையோடு ஒன்றுவதில் தொடங்கி, உடல்கள் காதலில் ஒன்றாவதில் முடிகிறது. தமிழின் முதல் உயிர் எழுத்தான அகரத்தில் தொடங்கி, கடை மெய்யெழுத்தோடு முடிகிறது. இப்படி தமிழ், தமிழரின் முதலும் முடிவுமாக இருந்தாலும், திருக்குறள் சாதி, மதம், இனம், தேச எல்லைகளைக் கடந்த ஒரு பொதுமையான நெறியைக் கூறுவதால், அதை ஓர் உலகப் பொது நூலாக யுனெஸ்கோ அங்கீகரிக்கும் என நம்புவோம்.