கோலாலம்பூர், மார்ச் 1 –
தனது வீட்டில் நுழைந்த மூன்று இந்திய இளைஞர்கள், முகமூடி அணிந்த நிலையில் கத்தி முனையில் தங்களின் 92 வயது தாயாரை அடித்து கீழே தள்ளியதுடன் தம்மையும் தமது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை அடித்து, கொடுமைப்படுத்தியதுடன், நகைகளையும், பணத்தை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களான பூச்சோங்கை சேர்ந்த 51 வயது தனபாலன் முருகையா குடும்பத்தினர் போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹுஸ்சேன் னிடம் இன்று மகஜர் சமப்பித்தனர்.
இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று இந்திய நபர்களில் இருவர் பிடிப்பட்டும், அவர்களை போலீசார் விடுவித்து இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இதற்கு போலீஸ் படைக்கு தலைமையேற்றுள்ள ஐஜிபி தான் ஶ்ரீ ராசாருடின் ஹுஸ்சேன் தீர்வு காண வேண்டும் என்று தனபாலன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் திரண்டு மகஜரை சமப்பித்தனர்.

மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மகஜர் ஒப்படைப்பு நிகழ்வில் ஐஜிபி சார்பாக புக்கிட் அமான் தொடர்புத்துறை அதிகாரி ஏ.ஸ்.பி ஹடிஜா பிந்தி லாதெ பெற்றுக்கொண்டார்.
மக்களின் தோழர், காவல் துறையினர் என்கின்றனர். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பூச்சோங், தாமான் பூச்சோங் உத்தாமாவில் தங்கள் வீட்டில் நுழைந்து தங்கள் குடும்பத்தை மிக மோசமாக நடத்தியப் பின்னர் மூன்று லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைகளையும், 60 ஆயிரம் வெள்ளி பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற மூன்று இந்திய நபர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் போலீசாரிடம் தந்து விட்டதாக தனபாலன் கூறுகிறார்..
குறிப்பாக, அந்த மூன்று நபர்களின் முகத்தை சித்தரிக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்கியப் பின்னர் அவர்கள் கொள்ளையடித்தப் பொருட்களையும் போலீஸ் நிலையத்தில் அடையாளம் காட்டினோம்.
ஆனால், மூன்று நபர்களில் பிடிபட்ட இரண்டு நபர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு ஆதாரங்கள் இல்லை என்கின்றனர் போலீசார்.
அனைத்து ஆதாரங்களையும் வழங்கியப் பின்னர் இன்னும் ஆதாரங்களை கேட்டால் நாங்கள் எங்கே போவது? பிடிபட்ட நபர்களிடம் சிக்கிய எங்கள் நகைகளும் பணமும் என்ன ஆனது? என்று ஏர்கண்டிஷன் குத்தகைத் தொழிலை நடத்தி வரும் 51 வயது தனபாலன் கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தினால் குடும்பச் சொத்துக்களை இழந்து பரிதவிக்கும் எங்களுக்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் நல்லதொரு தீர்வை தர வேண்டும். எங்களின் வாழ்வாதாரம் இதில்தான் அடங்கியிருக்கிறது என்று 92 வயது தமது தாயார், தமது மனைவியுடன் புக்கிட் அமானுக்கு வந்திருந்த தனபாலன் மிக உருக்கமான் வேண்டுகோளை முன்வைத்தார்.
