இந்தியா, ஏப்ரல் 02 –
ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக கோஷமிட்ட ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு அவர்களை ரோகித் சர்மா சாந்தப்படுத்திய ரோகித் சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 14ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் டிரெண்ட் போல்ட் மற்றும் நந்த்ரே பர்கர் வேகத்திற்கு மளமளவென சரிந்தது. கடைசியில் ஹர்திக் பாண்டியா 34 ரன்னும், திலக் வர்மா 32 ரன்னும் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.
பின்னர், எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, சஞ்சு சாம்சன் 12, ஜோஸ் பட்லர் 13 ரன்கள் என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் ரியான் பராக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துக் கொடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் செய்த போது ரோகித் சர்மா பவுண்டரி லைனில் பீல்டிங்கில் இருந்தார். அப்போது ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக கோஷமிட்டனர்.
அப்போது ரோகித் சர்மா அவர்களை சாந்தப்படுத்தும் விதமாக தனது கைகளையும் கூப்பி கையெடுத்து கும்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து அவர் மீதும், அணியின் மீதும் விமர்சனம் எழுந்து வருகிறது.
அவர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றின் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதில், ஹோம் மைதானத்தில் நடந்த 3 ஆவது போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.