இந்தியா, ஏப்ரல் 05-
ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுவதற்கு 73.68 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக இதுவரையில் இரு அணிகளும் மோதிய போட்டிகளை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ஹோம் மைதானத்தில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் கடைசியில் இறங்கிய தோனி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்ததோடு சிக்ஸர் விருந்தும் கொடுத்து அசத்தினார்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து தனது 4ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதுவரையில் ஹைதராபாத் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ஒரு போட்டியிலும் பல சாதனைகள் படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது.
இந்த நிலையில் தான் இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2 போட்டிகளில் வெற்றி பெற்ற சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. ஒரு போட்டியில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
இதுவரையில் இரு அணிகளும் 19 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 14 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. மேலும், 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிகபட்சமாக சிஎஸ்கே 223 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 132 ரன்கள் எடுத்துள்ளது.
இதே போன்று ஹைதராபாத் அதிகபட்சமாக 192 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், குறைந்தபட்சமாக 134 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 73.68 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் இடம் பெற வாய்ப்பில்லை. அவர், டி20 உலகக் கோப்பை அமெரிக்கா விசா பிரச்சனை காரணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அடுத்த போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.