இந்தியா, ஏப்ரல் 11-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது லீக் போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. மழையின் காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து டாஸ் போடப்பட்டு குஜராத் பவுலிங் தேர்வு செய்தது.
ஒரு கேப்டனாக சஞ்சு சாம்சனின் 50ஆவது ஐபிஎல் போட்டி இதுவாகும். மேலும், யுஸ்வேந்திர சஹாலின் 150ஆவது ஐபிஎல் போட்டி இது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சாய் சுதர்சன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட், அபினவ் மனோகர் ஒரு ரன்னில் நடையை கட்டினர். விஜய் சங்கர் 16 ரன்களில் வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் இந்தப் போட்டியில் 27 ரன்கள் எடுத்திருந்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமின்றி விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு பிறகு அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ராகுல் 80 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்த நிலையில், சுப்மன் கில் 94 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார். மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டுள்ளார். இதுவரையில் 26 வயது 186 நாட்களில் விராட் கோலி 3000 ரன்களை கடந்தது சாதனையை இருந்தது. இந்த நிலையில் தான் கில் 24 வயது 215 நாட்களில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் 26 வயது 320 நாட்களில் 3000 ரன்களை கடந்துள்ளார். சுரேஷ் ரெய்னா 27 வயது 161 நாட்களிலும், ரோகித் சர்மா 27 வயது 343 நாட்களிலும் 3000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.