இந்தியா, ஏப்ரல் 17-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகபட்சமாக 224 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 31 லீக் போட்டியில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஒரு அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணி தோல்வியை சந்தித்துள்ளது. இதே போன்று 160, 170 ரன்கள் எடுத்து கூட ஒரு அணி எதிரணியை அதற்குள்ளாக சுருட்டி வெற்றி பெற்றிருக்கிறது.
நேற்று தனது சொந்த மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் சுனில் நரைனின் அதிரடி சதத்தால் 223 ரன்கள் குவித்தது. அப்பாடா, 200 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டோம், வெற்றி தான் என்று நினைத்துக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக ஜோஸ் பட்லர் களமிறங்கினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிம்ரன் ஹெட்மயர் என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரியான் பராக் 34 ரன்கள் எடுக்க, கடைசியில் வந்த ரோவ்மன் பவல் 26 ரன்கள் சேர்த்தார். ஆனால், கடைசி வரை அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர், 60 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலமாக முதல் முறையாக கேகேஆர் அணியை அதிக ரன்கள் சேஸிங் செய்து ஆர்ஆர் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதே போன்று 223 ரன்களை சேஸ் செய்து அதிக ரன்கள் சேஸ் செய்த அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் படைத்தது.