இந்தியா, ஏப்ரல் 20-
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி 28 ரன்கள் எடுத்திருந்ததன் மூலமாக ஒரு விக்கெட் கீப்பராக 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் வெளியேறினார். அஜிங்க்யா ரஹானேவும் 24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நம்பர் 4ல் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவுடன், மொயீன் அலி இணைந்தார். இருவரும் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். 15 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. அடுத்த 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுக்கப்பட்டு மொத்தமாக 123 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது தான் 18ஆவது ஓவர் வீசுவதற்கு ரவி பிஷ்னோய் வந்தார். இதில், மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அதுவரையில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கூட அடிக்காத மொயீன் அலி, பிஷ்னோய் ஓவரை வச்சு செய்து, அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவர் தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் தோனி 3ஆவது பந்தில் சிக்ஸரும், 4ஆவது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் பவுண்டரியும் விளாசவே சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. இதில், தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த சீசனில் தோனி விளையாடிய 5 போட்டிகளில் வரிசையாக 37, 1, 1, 20, 28 என்று மொத்தமாக 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 7 பவுண்டரி, 8 சிக்ஸர் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.