இந்தியா, மே 06-
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 53ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி முதல் முறையாக 9ஆவது வரிசையில் களமிறங்கியுள்ளார்.
வருடத்திற்கு ஒரு முறை தான் தோனியின் தரிசனம் கிடைக்கிறது. அதுவும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாகத்தான் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் தோனியின் தரிசனத்தை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருக்கிறனர். அப்படியிருக்கும் நிலையில், தோனியின் ஒவ்வொரு அசையும் ஏராளமானோர் ரசிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரன 53ஆவது லீக் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, 17ஆவது ஓவரில் தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்த போது, தோனி 9ஆவது வரிசையில் களமிறங்கினார்.
இதன் மூலமாக முதல் முறையாக தோனி 9ஆவது வரிசையில் களமிறங்கியுள்ளார். இதற்கு முன்னதாக ஒரு விக்கெட் கீப்பராக 9ஆவது வரிசையில் களமிறங்கியவர்களின் பட்டியலில் மகேஷ் ராவத் (ஆர்ஆர், 2008 -2009) 6 முறை 9ஆவது வரிசையில் களமிறங்கியுள்ளார்.
இறுதியாக ரிச்சர்டு கிளீசன் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் சிஎஸ்கே 5 போட்டியில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 4ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.