இந்தியா, மே 08-
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அவுட்டு தான், நடுவர் சரியான முடிவைத் தான் எடுத்திருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது லீக் போட்டி நேற்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய டெல்லி ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் அதிரடியால் 221/8 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார்.
எனினும், அவர் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். முகேஷ் குமார் ஓவரில் சாம்சன் பந்தை தூக்கி அடித்தார். அங்கு பவுண்டரி லைனில் நின்றிருந்த ஷாய் ஹோப் சர்ச்சையான முறையில் கேட்ச் பிடித்தார். கள நடுவரிடம் முறையிட்டும் பலனில்லாமல் கடைசியில் நடையை கட்டினார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்ததற்கு ரசிகர்கள், நடுவரை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தன் பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷேன் வாட்சன் கூறியிருப்பதாவது: சஞ்சு சாம்சன் அவுட் தான். இந்த சூழலில் நடுவர்கள் சரியான முடிவு எடுத்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 3ஆவது நடுவர் சரியான முடிவை எடுத்தார். இந்த முடிவு தெளிவாக இருந்ததால் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.