விமர்சனத்தையே சாதனையாக மாற்றிய ரூ.24.75 கோடி நாயகன் மிட்செல் ஸ்டார்க் – ஆட்டநாயகன் விருது, ரூ.5 லட்சம் பரிசு

இந்தியா, மே 27-

ஐபிஎல் 2024 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு விக்கெட்டுகள் எடுக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான மிட்செல் ஸ்டார்க் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று ரூ.5 லட்சமும் பரிசுத் தொகை வென்றுள்ளார்.

ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் கவுதம் காம்பீர் மூலமாக ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இவரைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடிய மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை. மாறாக, அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து விமர்சனத்தை சந்தித்து வந்தார். இதன் காரணமாக சில போட்டிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்படி சில போட்டிகளில் ஒரு சில விக்கெட்டுகள் கைப்பற்றி அடுத்தடுத்த போட்டிகளில் இடம் பெற்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் (0), நிதிஷ் ரெட்டி (9), ஷாபாஸ் அகமது (1) என்று முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதே போன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா (2), ராகுல் திரிபாதி (9) என்று முக்கியமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியாக வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களும் எடுக்கவே 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது. சாம்பியனான கேகேஆர் அணிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையும், ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 2 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும், ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றார். அதோடு, அபிஷேக் சர்மாவை ball of ipl 2024 சிறப்பான பந்து வீச்சின் மூலமாக ஆட்டமிழக்கச் செய்தார்.

WATCH OUR LATEST NEWS