அமெரிக்கா, ஜூன் 21-
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது பார்படோஸில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் அடித்திருந்தார். ஷிவம் துபே 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் நின்று விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 28 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து தடுமாறியது. அதன் பிறகு தான் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி அதிரடி காட்டினார்.
சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து டிரெஸிங் ரூமிலிருந்த ஒட்டு மொத்த இந்திய வீரர்களும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரவீந்திர ஜடேஜா 7 ரன்களில் வெளியேறவே அக்ஷர் படேல் கடைசியில் வந்து 12 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.