இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. மத்த டீமுக்கு ஒரு நியாயமா? உலகக்கோப்பையில் வெடித்த சர்ச்சை

கயானா, ஜுன் 27-

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடந்து கொள்வதாக பிற அணிகளின் முன்னாள் வீரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக இரண்டு அரை இறுதி போட்டிகளுக்கான மைதானம் மாற்றப்பட்டது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் அரை இறுதிப் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. அங்கு பிட்ச் மோசமாக இருந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி அதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களுக்கு சுருட்டியது. அதன் பின் தென்னாப்பிரிக்கா எளிதாக 8.5 ஓவரில் சேஸிங் செய்து வென்றது. இந்த பிட்ச்சில்தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டி நடைபெற்று இருக்க வேண்டும்.

ஆனால், முதல் அரை இறுதிப் போட்டி இந்திய நேரப்படி விடியற்காலை 6:00 மணிக்கு துவங்கும் என்பதால் இந்திய ரசிகர்கள் அதிக அளவில் போட்டியை பார்க்க மாட்டார்கள். அதனால், விளம்பர வருவாயில் இழப்பு ஏற்படும் என்பதால் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க உள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் வகையில் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.

அதனால், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி கயானாவுக்கு மாற்றப்பட்டது. அங்கு மழை பெய்து வரும் நிலையில் போட்டி கைவிடப்படும் என சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் சூப்பர் 8 சுற்றில் தனது பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

WATCH OUR LATEST NEWS