டி20 WC வின்னிங் டீமுக்கு பிசிசிஐ கொடுத்த ரூ.125 கோடி பரிசுத் தொகை – யார் யாருக்கு எவ்வளவு?

இந்தியா, ஜூலை 8 –

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபி கைப்பற்றிய நிலையில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணியினர் மெரைன் டிரைவ் வந்து நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.

கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த 125 கோடியை அணி வீரர்கள் எப்படி பகிர்ந்து கொள்வார்கள்? யார் யாருக்க் எவ்வளவு தொகை வழங்கப்படும்? பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக அணி வீரர்களுக்கு அந்த 125 கோடி பிரித்து வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கான பதில் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியுடன் துணை பணியாளர்கள், ரிசர்வ் பிளேயர்ஸ் என்று மொத்தமாக 42 பேர் அமெரிக்கா சென்றனர். பிசிசிஐ கொடுத்த ரூ.125 கோடி பரிசுத் தொகையானது 42 பேர் கொண்ட இந்திய அணி குழுவுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால், அது வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், பிசியோ என்று ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

தனியார் ஆங்கில பத்திரிக்கையில் வெளியான தகவலின்படி போட்டிய்ல் இடம் பெற்று விளையாடிய வீரர்களுக்கு பிசிசிஐ ஒப்பந்தப்படி பரிசுத் தொகை வழங்கப்படும். இவர்கள் தவிர, ஒரு போட்டியில் கூட விளையாடாத இந்திய வீரர்களுக்கு தலா ரூ.5 கோடியும், இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு ரூ.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும், உதவி ஊழியர்களில், 3 பிசியோதெரபிஸ்ட்கள், 3 த்ரோடவுன் நிபுணர்கள், 2 மசாஜ் செய்பவர்கள் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் வழங்கப்படும். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உட்பட தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படும்.

இது குறித்து வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என்று அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் இன்வாய்ஸ் சமர்ப்பிக்குமாறு பிசிசிஐ தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

WATCH OUR LATEST NEWS