ஆகஸ்ட் 12-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது.
ஒலிம்பிக் 2024இன் நிறைவு விழா பாரிஸ் நகர மைதானத்தில் நள்ளிரவு 12.30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில் அமெரிக்க இசைக்கலைஞர்களான பில்லி ஐலிஷ் (Billie Eilish), ஸ்னூப் டாக் (Snoop Dogg) மற்றும் பிரபல அமெரிக்க இசைக்குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் (Red Hot Chili Peppers) கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு, தனது பாணியில் ஒரு ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2028இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.
இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.