செப்டம்பர் 24-
லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான்.
2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.
அதேநேரத்தில், ஹெஸ்பொலா 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் தாக்குதலில் பலியான 492 பேரில் 35 பேர் குழந்தைகள், 58 பேர் பெண்கள் என்றும், 1,645 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை.
ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, “நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்” என்றார். “இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறினார்.
ஹெஸ்பொலா நினைத்துப் பார்க்க முடியாத பல தாக்குதல்களை அதன் மீது இஸ்ரேல் நடத்தியிருப்பதாக அவர் கூறினார்.
ஹெஸ்பொலா குழுவின் துணைத் தலைவர் நைம் காசிம், “அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்காது. அனைத்து சாத்தியமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.