பிசிசிஐ எடுக்கும் பெரிய ரிஸ்க்.. கான்பூர் மைதானம் இடிந்து விழுந்து விடும்.. பார்வையாளர்கள் வேண்டாம்

கான்பூர் : இந்திய வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. எனினும் இந்த மைதானத்தில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் ஒரு பால்கனியை இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை உள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் ஏற்கனவே விற்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் அரசு சார்பாக மைதானம் பாதுகாப்பாக பார்வையாளர்களுக்கு இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டு அனுமதி வழங்கப்படும். அதேபோல் கான்பூர் மைதானம் ரசிகர்களுக்கு பாதுகாப்பானாக இருக்கிறதா என்று உத்தரபிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அப்போது மைதானத்தில் இருக்கும் பால்கனி சி பகுதி இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பால்கனி சி யில் மொத்தம் 4800 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை பார்க்க முடியும். ஆனால் அது மிகவும் பலவீனமாக இருப்பதால் அங்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது. எனினும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் நிர்வாகம் பால்கனி பகுதியில் உள்ள 4800 டிக்கெட்டுக்கு பதில் 1700 டிக்கெட்டுகளை மட்டும் விற்க முடிவெடுத்திருக்கிறது. மேலும் பார்வையாளர் மாடம் இடிந்து விழாமல் இருக்க பாதுகாப்பு கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது. இது குறித்து சோதனை செய்த அதிகாரிகள் பார்வையாளர்கள் மாடம் மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும், அங்கு 50 ரசிகர்கள் பண்ட் சிக்சர் அடித்த பிறகு எழுந்து குதித்தால் கூட அது இருந்து விழுந்து விடும் என்றும் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இதைப் போன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் மின்விளக்குகள் பிரச்சனை இருக்கிறது.

விஐபி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள விளக்குகள் செயல்படவில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே இங்கு கடந்த முறை இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடிய டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. போதிய வெளிச்சம் இல்லை என்ற காரணத்தினால் தான் அந்த போட்டி தடைப்பட்டது. எனினும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பிரச்சினை சரி செய்யப்படவில்லை.ஏற்கனவே மழையும் பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா என்ற சூழல் எழுந்துள்ளது .அது மட்டும் இல்லாமல் தற்போது பார்வையாளர்கள் மாடமும் சரியில்லை என்று தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

WATCH OUR LATEST NEWS