மாநில கல்லூரி மாணவர் மரணம்: மோதலை தடுக்க காவல்துறை ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையெ எழுந்த மோதல் காரணமாக ஒரு மாணவர் மரணமடைந்த நிலையில், கல்லூரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ரலில் கடந்த வாரம் பச்சையப்பா மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடைய எழுந்த மோதலில், படுகாயமடைந்த சுந்தர் என்ற மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் மரணமடைந்ததால், இரு கல்லூரிகளுக்கும் பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி பகுதியை சேர்ந்தவர் சுந்தர். சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக, சென்னை சென்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கீழ்பபாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுந்தரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சுந்தர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து பெரியமேடு காவல்நிலையத்தில் சுந்தரின் தந்தை புகார் அளித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வர் (19), ஹரி பிரசாத் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதனிடையே கடந்த 5 நாட்களாக சிகிச்சையில் இருந்த மாணவர் சுந்தர், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.   இந்த மரணம் காரணமாக இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும என்பதால், காவல்துறை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக இரு கல்லூரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில் வழித்தடத்திலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் இறங்கி வரும் மாணவர்களின் அடையாள அட்டைகளும் ஆய்வு செய்ய்ப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூட்டு தல விவகாரத்தில் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

WATCH OUR LATEST NEWS