தென்கொரிய எல்லை நிரந்தர துண்டிப்பு.. வேகம் காட்டும் வடகொரியா!

அக்டோபர் 10-

தென்கொரியாவுடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாக துண்டிக்க உள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்துவரும் எல்லைப் பிரச்னையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது அந்நாடு. தற்போது, அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

வடகொரியா இந்த அளவிற்கு யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். மேலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென்கொரியாவின் திறன்களுடன் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை இணைக்கும் திட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள், நீண்டதூரம் சென்று குண்டுவீசும் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை தென்கொரியாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS