அக்டோபர் 11-
15 முதல் 49 வயதுடையவர்களிடையே எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்பு 2010 இல் 0.35 சதவீதமாக இருந்து 2023-ம் ஆண்டு 0.20 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு 0.16% ஆக உள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (டான்சாக்ஸ்) நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன், கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வெளியான எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான அறிவிக்கையில், இந்தியாவில் மொத்தம் 16,80,083 பேர் எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் மொத்தம் 1,32,383 பேர் எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010 இல் 0.38 சதவீதமாக ஆக இருந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு, கர்ப்பிணிப் பெண்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் ஆதரவின் காரணமாக 0.16 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் 15 முதல் 49 வயதுடையவர்களிடையே எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்பு 2010 இல் 0.35 சதவீதமாக இருந்து 2023-ம் ஆண்டு 0.20 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள் அச்சிடப்பட்ட துணிப்பைகள் (மஞ்சப்பை) வழங்கும் முயற்சி இந்த விழாவில் தொடங்கப்பட்டது. சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, டான்சாக்ஸ் திட்ட இயக்குனர் ஆர்.சீதாலட்சுமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
